விவசாயிகள் முதல் பொதுமக்கள் வரை... தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பற்றிய கட்டுரை...

போலீஸார் அணிவகுப்பு (துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு முன்பாக)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, நேற்று (22-ம் தேதி) 100-வது நாளாகப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதற்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு, அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர். இந்த நிலையில், இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் பற்றி இங்கே காண்போம்...

* ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், விவசாயிகள் உரிமைப் போராட்டத்தின்போது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* 1970 - 1993-ம் ஆண்டு வரை ஏறத்தாழ 48 விவசாயிகள் தமிழகப் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

* 1970-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 4 விவசாயிகள் பலியாகினர். 

* 1972-ம் ஆண்டு தூத்துக்குடி, சங்கரன்கோவில் வட்டாரங்களில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, கோவில்பட்டி நகரத்தில் 3 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

* 1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.

* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.

* அருப்புக்கோட்டை அருகே, வாகைக்குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

* 1992-ம் ஆண்டு, கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் நடத்திய ஊர்வலத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் பலியாகினர்.

* 1994 அக்டோபர் 10-ம் தேதி, காஞ்சிபுரத்தில்  நடந்த தலித் சமூகத்தினர் பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் பலியாகினர். 

* 1995 ஆகஸ்ட் 31-ம் தேதி, நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 பேர் பலியாகினர். 
 
* 1997 ஜனவரி 7-ம் தேதி, கயத்தாறு பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

* 1997, ஏப்ரல் 16-ம் தேதி, சிவகாசியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட போக்குவரத்துக் கழகம் தொடர்பான போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
 
* 1997 மே 5-ம் தேதி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடையை மீறிச் சென்றதற்காகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கைதுசெய்யப்பட்டார். இதைக் கண்டித்து திருநெல்வேலியில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார்.

* 1999 ஜூலை மாதம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் கூலி உயர்வு கேட்டுப் போராடினர். இதில் கைது செய்யப்பட்டவர்களைக் கண்டித்து, அந்த மாதம் 23-ம் தேதி நெல்லையில் பேரணி நடைபெற்றது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், உயிர் பிழைப்பதற்காக ஓட்டம்பிடித்தவர்களில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

* 2001 ஆகஸ்ட் 12-ம் தேதி,  தி.மு.க தலைவர் கருணாநிதியின் கைதைக் கண்டித்து அக்கட்சியினர் நடத்திய பேரணியின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் பலியாகினர். 

* 2011 நவம்பர் 11-ம் தேதி, இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வின்போது ஏற்பட்ட கலவரத்தில், தமிழகப் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர்.

* 2013 மார்ச் 31-ம் தேதி, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இரு தரப்பினருக்கு இடையே கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

* 2014 டிசம்பர் 27-ம் தேதி, தேனியில் ஃபார்வர்டு பிளாக் கட்சிப் பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில், ஒருவர் பலியானார். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரக்காரர்களைக் கலைத்தனர்.

* 2016 நவம்பர் 10-ம் தேதி, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குமாரபுதுக்குடியிருப்பில் காதல் பிரச்னையால் ஏற்பட்ட மோதலில், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் காயமடைந்தனர்.  

* 2018 மே 22-ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!