குப்பைக்கிடங்கால் சுகாதாரமற்ற நிலை - அவதிப்படும் கிராம மக்கள்!

சிவகங்கை நகரில் உள்ள குப்பைகளைச் சேகரித்து, ஒரு குறிப்பிட இடத்தில்  குவிப்பதால், சுகாதாரம் கெட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்குத் தீர்வு காணக்கோரி, சுந்தரநடப்பு உள்ளிட்ட 10 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தத்  திட்டமிட்டுள்ளனர்.

குப்பை

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில், 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்கள் வசிக்கிறார்கள். சிவகங்கை நகரத்தில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளின் எடை, 19 மெட்ரிக் டன் ஆகும். இந்தக் குப்பைகளுக்காக  சுந்தரநடப்பு கிராமத்திற்கு அருகே 20 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு 2008-ல் உருவாக்கப்பட்டது.இந்த குப்பைக்கிடங்கு உருவாகும்போது, மக்கும் குப்பை மக்காத குப்பை எனப் பிரித்து, மக்கும் குப்பையை உரமாகத் தயாரித்துப் பயன்படுத்துவது; மக்காத குப்பையை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது இந்தக் குப்பைகளை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தீவைத்து எரித்துவருகிறார்கள். மக்கும் குப்பைகள் உரமாக்கப்படவில்லை. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவில்லை. இந்தக் குப்பையைத்  தீவைத்து எரிப்பதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம்  வீசுகிறது.

சுந்தரநடப்பு, துவாங்கால், காட்டு நெடுங்குளம், குட்டிதண்ணி, உசிலங்குளம், உடையநாதபுரம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில்  சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஈக்கள் மொய்க்கின்றன.  இதனால், சாதாரணமாக வாழமுடியாத நிலை உருவாகியிருப்பதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். துர்நாற்றமடிக்கும் குப்பைகள் கண்மாயில் தேங்கி, மாசுபடுத்திவிட்டது. இதனால், மீன்கள் வளரமுடியாத நிலை உருவாகியிருக்கிறது. சுந்தரநடப்பு உள்ளிட்ட 10 கிராம மக்கள் நடத்த உள்ள போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என்று மாவட்டச் செயலாளர் கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் மதி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், மாவட்டச் செயலாளர் கந்தசாமி கூறும்போது, “ சிவகங்கை நகரில் 2007-ல் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிவடையாமல் கிடப்பில் கிடக்கிறது. தற்போது, சிவகங்கை நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பையை ஒழுங்குபடுத்தாததால்,  சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.10 கிராம மக்கள் சுகாதார  சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக்கிடங்கு அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னையில், கிராம மக்கள் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஈடுபாட்டோடு பங்கேற்கும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!