தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு | case file in madras highcourt about tuticorin firing

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (23/05/2018)

கடைசி தொடர்பு:12:42 (23/05/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

தூத்துக்குடியில், போலீஸார் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நூறு நாள்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 100-வது நாளான நேற்று, பெரிய அளவில் அடையாள போராட்டம் நடத்தப்படும் என தூத்துக்குடி போராட்டக்காரர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு, தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுக்க வந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டம் கலவரமாக மாறியது. இதைத் தொடர்ந்து, போலீஸ் வாகனங்கள் உட்பட சுமார் 110 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தக் கலவரத்தின் இறுதியாக, போலீஸார் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனால், 10 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம், இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இன்று கமல், ஸ்டாலின், வைகோ, பி.ஆர் பாண்டியன் ஆகியோர் தூத்துக்குடி செல்ல உள்ளனர். 

இதனிடையே. தூத்துக்குடியில் பொதுமக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்தது யார் எனக் கேட்டு, வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, பார்வேந்தன், காளிமுத்து உள்ளிட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.