முன்னுரிமை அளிக்கும் ஆற்றுநீர் பாசன அமைப்பு! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 11 | The abandoned story of Cauvery - series 11

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (23/05/2018)

கடைசி தொடர்பு:12:14 (23/05/2018)

முன்னுரிமை அளிக்கும் ஆற்றுநீர் பாசன அமைப்பு! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 11

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...

காவிரி மட்டுமல்ல... பொதுவாக உலகில் உள்ள எல்லா நாடுகளிடையேயும் ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிமுறைகள் பற்றி கடந்த நூற்றாண்டிலேயே சூடான விவாதங்கள் நடைபெறத் தொடங்கின.

காவிரி

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

நான்கு வகை கோட்பாடுகள்!

1894-ம் ஆண்டில் கொலராடோவில் தென்வர் என்ற இடத்தில் பாசனப் பேரவை ஒன்று கட்டப்பட்டது. பன்னாட்டு ஆறுகளின் மீது சட்ட அதிகாரம் கொண்ட பன்னாட்டு அமைப்பொன்றை உருவாக்குவது பற்றி அது கருத்துத் தெரிவித்தது. அந்தக் காலகட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகள் ஆற்றுநீர்த் தகராறு தொடர்பாகப் பல்வகைக் கோட்பாடுகளை முன்வைத்தன. நதிநீர்ச் சிக்கலில் தாங்கள் சார்ந்திருக்கும் நிலைக்குத் தகுந்தவாறு சில கோட்பாடுகளை அந்த நாடுகள் உருவாக்கியிருந்தன. 

1. ஆற்றுப்படுகை உழவர்களின் உரிமைக் கோட்பாடு (The doctrine of riparian rights),  2. தேச இறையாண்மைக் கோட்பாடு (The doctrine of Territorial sovereignty), 3. உடைமைக் கோட்பாடு (Doctrine of appropriation), 4. சமப் பங்கீட்டுக் கோட்பாடு (The doctrine of equitable apportionment) என அவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

ஆற்றின் கடைக்கோடியில் உள்ள நாடு, ஆற்றில் இயற்கையாக ஓடிவரும் நீரைக் குறைவின்றிப் பெற வேண்டும் என்பது ஆற்றுப் படுகை உழவர்களின் உரிமைக் கோட்பாடு ஆகும். தன் எல்லைக்குட்பட்ட ஆற்றுநீர் மற்றும் அதன் பயன்பாடுகள் மீது, முழு இறையாண்மையையும் அறுதியான சட்ட அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் அந்நாடே பெறுவது தேச இறையாண்மைக் கோட்பாடு ஆகும். முதலில், தக்க நேரத்தில் தன்னுடைமையாக்கிக் கொள்பவருக்கே அதன் மீதான முதல் உரிமை உண்டு என்பது உடைமைக் கோட்பாடு ஆகும். குறிப்பிட்ட பரப்பு அல்லது அமைப்புக்குட்பட்ட ஆற்றுநீரின் பயன்கள், அவ்வமைப்பு அல்லது பரப்பின் மீது சட்ட அதிகாரம் செலுத்தும் நாடுகள் தங்களுக்கிடையே சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பது சமப் பங்கீட்டுக் கோட்பாடு ஆகும். 

ஆற்றுப் படுகை உழவர்களின் உரிமைக் கோட்பாட்டையும், உடைமைக் கோட்பாட்டையும் ஆற்றின் கீழ்ப்படுகை நாடுகள் வற்புறுத்தின. ஹார்மன் கோட்பாடு என அழைக்கப்படும் தேச இறையாண்மைக் கோட்பாட்டை ஆற்றின் மேற்படுகை நாடுகள் வலியுறுத்தின. கொலம்பியா ஆற்றுநீர்த் தகராறின்போது கனடா, இந்தக் கோட்பாட்டின் (தேச இறையாண்மைக் கோட்பாடு)  அடிப்படையில் தன் வழக்கை முன்வைத்தது. அமெரிக்காவோ, தன் பகுதிக்குச் சார்ந்து வரக்கூடிய உடைமைக் கோட்பாட்டைச் சார்ந்து நின்றது. ஒப்பந்தங்கள் பலவற்றுக்கும் அமெரிக்கா இந்தக் கோட்பாட்டையே பின்பற்றியது. குறிப்பாக, 1944-ம் ஆண்டு அமெரிக்க - மெக்சிகன் ஒப்பந்தத்துக்கு இந்தக் கோட்பாட்டையே பின்பற்றி இருந்தது.

காவிரி

பயனில்லாத ஹார்மன் கோட்பாடு! 

மேற்கண்ட நான்கு கோட்பாடுகளில் பயனில்லாத கோட்பாடு ஹார்மன் கோட்பாடு மட்டும்தான் என்று பலராலும் விமர்சனம் செய்யப்படுகிறது. இந்தக் கோட்பாடு குறித்து ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.வி.நமச்சிவாயம், “காவிரி ஆற்றுநீர்ச் சிக்கலில் கர்நாடகம் இப்போது வற்புறுத்தும் ஹார்மன் கோட்பாடு ஒதுக்கிவைக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட ஒன்றாகும். ஏனெனில், அது இயற்கை நெறிமுறைக்கு எதிரானது. இக்கோட்பாட்டின்படி அணைகள் கட்டப்பட்டால், ஆற்றின் கீழ்ப்படுகை உழவர்களுக்குத் தேவைப்படும்போது நீர் கிடைக்காது. தேவைப்படாதபோது வெள்ள வடிவில் மிகையாகக் கிடைக்கும். வெள்ளத்தைத் தடுக்கவும், தேவைப்படும்போது நீரைப் பயன்படுத்திக் கொள்ளவுமே மனிதன் அணைகளைக் கண்டுபிடித்தான். எனவே, சட்டவியல் அடிப்படையிலோ, நீரியல் அடிப்படையிலோ ஹார்மன் கோட்பாடு எந்த நீதிமன்றத்திலும் செல்லுபடியாகாது” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற, சோமாலியாவின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைவர் ஹாஜி என்.ஏ.நூர் முகமது, ‘இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள்’ குறித்த கட்டுரையில், ஹார்மன் கோட்பாடு பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறார். “ஹார்மன் கோட்பாடு, இந்தியாவில் எப்போதும் பயன்படுத்தப்படவே இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஓர் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மாநிலம் ஒன்று, அதே ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதைப் பற்றிக் கவலையுறாமல், அந்த ஆற்றில், வளர்ச்சிப் பணியில் ஈடுபட உரிமை கிடையாது. அரசியலமைப்பின் 206-ம் பிரிவிலிருந்து இது அறியப்படுகிறது. இப்பிரிவு, மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள், வடிநிலங்கள் ஆகியன தொடர்பாக எழும் தகராறுகளைத் தீர்த்துவைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குகிறது. இந்தக் கோட்பாட்டின் செல்லுபடியாகும் தன்மை உலகளவில் சந்தேகத்துக்கிடமானதாக உள்ளது. கூட்டாட்சியில் அதன் அலகுகளுக்கிடையே, மாநிலங்களுக்கிடையே இது பயன்படாது. எனவே, இரண்டாவது கோட்பாடு எங்கும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது, கல்வியாளர்களிடையே விவாதத்துக்கான ஒரு பொருளாக மட்டும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

காவிரி

ஹெல்சின்கி விதிகள்!

ஹார்மன் கோட்பாட்டைப்போல, ஆற்றுப்படுகை உழவர்களின் உரிமைக் கோட்பாடும், உடைமைக் கோட்பாடும் செல்வாக்குப் பெறவில்லை. அவை, ஆற்றின் கீழ்ப்படுகையைச் சேர்ந்தவர்கள் அனைத்தையும் தாங்களே உரித்தாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. அதேவேளையில், நாடுகளுக்கிடையேயான அனைத்து நதிநீர்ச் சிக்கல்களும் நான்காவது கோட்பாட்டின் அடிப்படையிலேயே தீர்த்து வைக்கப்படுகிறது. புகழ்பெற்ற ஹெல்சின்கி விதிகளும் இதை முன்னடிப்படையாகக் கொண்டுதான் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்விதிகளில், விதி 5-இன்படி ஆற்றில் மிகை நீர் வடிநிலப் பகுதி, பிரிக்க முடியாத நீரியல் அலகாகும். இதன் அடிப்படையிலேயே வடிநிலப் பகுதிக்கான பங்கீடு முடிவு செய்யப்பட வேண்டும். அரசியல் அடிப்படையில் பல்வேறு நாடுகள் உள்ளன என்பது பங்கீட்டை எவ்வகையிலும் பாதிக்காது. இவ்விதிகள், காவிரி ஆற்று நீர்ச் சிக்கலில், தமிழ்நாடு கோரும் பங்கீட்டு உரிமைகள் நேர்மையானவை என ஏற்கின்றன. ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வதில் ஆற்றின் கீழ்ப்படுகை நாடுகளுக்குள்ள முன்னுரிமையைப் பன்னாட்டுச் சட்டம் ஏற்றுக்கொள்கிறது. குறிப்பிட்ட ஆற்றின் பாசன அமைப்பு முறை சூழல்களின் அடிப்படையில் அச்சட்டம் பல்வேறு நாடுகளுக்கு நீரைப் பகிர்ந்தளிக்கிறது. காவிரி ஆற்றுப் பாசன அமைப்பு, காவிரி ஆற்றுநீரில்  தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் கர்நாடகமோ, இவ்வாற்று அமைப்பை வெள்ளப்பெருக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வடிகால்  அமைப்பாக மாற்ற விரும்புகிறது. சட்டத்தின்படி, பிற்காலக் கண்டுபிடிப்புகளான அணைகள், ஆற்றின்கீழ் வடிகால் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆயிரம் ஆண்டுக்காலப் பழைமையும், இயற்கையானதுமான உரிமைகளை மாற்றவோ, நசுக்கவோ முடியாது. ஆனால், இவற்றையெல்லாம் மீறித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கர்நாடகம்.

- காவிரி பாயும்....

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்