வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (23/05/2018)

கடைசி தொடர்பு:13:22 (23/05/2018)

துப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர்! - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு

' வேதாந்தா குழுமத்தின் அழுத்தம் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்து முக்கியப் புள்ளிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிட்டது' என்கின்றனர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர். 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணியில், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு 10 பேர் பலியானது, மக்களிடையே கொந்தளிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. 'வேதாந்தா குழுமத்தின் அழுத்தம் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்து முக்கியப் புள்ளிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிட்டது' என்கின்றனர், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர். 

தூத்துக்குடி, சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் பல்வேறு நோய்களும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 'ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு, சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராம மக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். பொதுமக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால், கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவல முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடைகளும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. நேற்று காலை 9 மணியளவில், இருபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டனர். தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் பகுதி அருகே வந்தபோது, இரும்புத் தடுப்புகளை வைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீஸ். ' தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கலைந்து செல்லுங்கள்' எனக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 10 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூடு சம்பவம்குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருக்கிறது. தமிழக அரசும், 'நீதி விசாரணை அமைக்கப்படும்' என அறிவித்திருப்பதை பொதுமக்கள் விரும்பவில்லை. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சம்பவம்குறித்து நம்மிடம் பேசிய ஸ்டெர்லைட் போராட்டக் குழு நிர்வாகி ஒருவர், " இது முன்கூட்டியே திட்டமிட்ட சம்பவம். வேதாந்தா நிறுவனத்தின் ஊழியராகத்தான் கலெக்டர் வெங்கடேசன் செயல்பட்டுவருகிறார். நூறு நாள்களைக் கடந்து போராட்டம் நடந்தாலும், ஒருநாள்கூட பொதுமக்களை சந்தித்து அவர் பேசவில்லை. ஒருமுறைகூட மக்களிடமிருந்து அவர் மனுவை வாங்கவில்லை. மாறாக, போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் அதிக அக்கறை செலுத்திவந்தார். தொடர்ச்சியான போராட்டங்களால் வேதாந்தாவின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பல வகைகளில் முயன்றனர். ஒருமுறை நடிகர் கமல் பேசும்போது, ' பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்கு 5 கோடி ரூபாய் வரை கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்' என்றார். இதுதான் நடந்துவருகிறது. அரசியல் கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு ஆலைக்குள் ஒப்பந்தம் வழங்குவது, மாதம்தோறும் மாமூல் கொடுப்பது எனப் பல்வேறு உபாயங்களைக் கையாண்டுவருகிறது ஸ்டெர்லைட்" என விவரித்தவர், 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்

" போராட்டத்தை நீர்த்துப்போக வைப்பதற்காக, கூட்டமைப்பையே இரண்டாகப் பிரித்துவிட்டது மாவட்ட நிர்வாகம். போராட்டக் களத்தில் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பெண் ஒருவர் தலைமையில், வியாபாரிகளை ஒருங்கிணைத்து போலீஸ் மைதானம் ஒன்றுக்கு அனுப்பிவைத்துவிட்டனர். நேற்று முன்தினம் இதுகுறித்து வியாபாரிகள் சிலரிடம் பேசிய மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்கள், ' பேரணியில் வன்முறை வெடிக்கும். கட்டாயம் துப்பாக்கிச் சூடு நடக்கும். நீங்கள் எல்லாம் வியாபாரிகள். இந்த விவகாரத்தில் ஒதுங்கி நில்லுங்கள். நீங்கள் பாதிக்கப்பட்டால், நாங்கள் பொறுப்பல்ல' எனக் கூறிவிட்டனர். இதைப் புரிந்துகொண்டு, கடை அடைப்பு எனக் கூறிக் கொண்டு அவர்களும் மைதானத்துக்குச் சென்றுவிட்டனர்.

கலெக்டர், எஸ்.பி கூட்டிய கூட்டத்துக்குச் சென்று கையெழுத்தும் போட்டுவிட்டு வந்தார் அந்தப் பெண்மணி. அவரை கூட்டமைப்புக்குள் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. அதேபோல, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பெண்மணி ஒருவருக்கும், துப்பாக்கிச் சூடு விவகாரம் முன்கூட்டியே தெரியவந்திருக்கிறது. தன்னுடைய தலைமையில் சிலரைத் திரட்டி, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் கோஷம் போட்டார். அவரையும், அவரோடு கோஷம்போட்ட சிலரையும் தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்துவிட்டனர். இதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. அதனால்தான், பேரணியில் கலந்துகொள்ளாமல், அந்தப் பெண்மணிகள் இருவரும் விலகிக்கொண்டனர். வேதாந்தாவின் கட்டளைகளின்படியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தப் படுகொலைகளுக்கு, எடப்பாடி அரசு பதில் சொல்லவேண்டிய நேரம் வரும்" என்றார் கொதிப்புடன்.