“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி

“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” என்று தூத்துக்குடியில் நடந்த துப்பாகிச் சூடு சம்பவத்துக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 100 நாள்களாக தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தங்களின் 100-வது போராட்டத்தின் அடையாளமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்தனர். இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன்தினம் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி, தங்களின் போராட்டத்தை நடத்த மக்கள் முடிவுசெய்தனர். இதனால், பாதுகாப்புப் பணிகளுக்காக 2000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது அவர்களைக் காவல்துறை தடுத்ததால், போராட்டம் கலவரமாக மாறத் தொடங்கியது. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது, கல் வீச்சு, கண்ணீர்ப்புகை குண்டுகள் ஆகிய சம்பவங்களும் நடைபெற்றன. பின், கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனங்களைத் தமிழில் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஏனென்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்  சித்தாந்தத்துக்கு அடிபணிய  மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும்  தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ்ச் சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுடன்  இருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!