வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (23/05/2018)

கடைசி தொடர்பு:15:06 (23/05/2018)

`காவல்துறையின் மிருகத்தனமான செயல்' - துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக ரஜினி கொந்தளிப்பு

`தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, அரசின் அலட்சியம்; உளவுத்துறை உட்பட ஒட்டுமொத்த நிர்வாகத்தின் தோல்வி; காவல்துறையின் மிருகத்தனமான செயல்' என நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார். 

ரஜினி

ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம். நேற்று காலை முதல் தற்போது வரை போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது. வாகனங்கள் எரிப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு என அடுத்தடுத்து பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. நேற்று போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் போராட்டக்காரர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதற்கு, பல அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். 

அவர்களைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றத் தலைவரும், நடிகருமான ரஜினிகாந்த், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து தான் பேசிய வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, அரசின் அலட்சியம், உளவுத்துறை உட்பட ஒட்டுமொத்த நிர்வாகத்தின் தோல்வி. காவல்துறையின் வரம்பு மீறிய, சட்டத்துக்குப் புறம்பான, மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.