“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை?” #SterliteProtest

“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை?” #SterliteProtest

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பல்வேறு பரபரப்புத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமலேயே காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நூறு நாள்களாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நூறாவது நாளான நேற்று, சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். இந்தப் பேரணிக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்ததோடு, போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்புகளை அமைத்திருந்தனர். என்றாலும் தடையை மீறி போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால், போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேரணியில் வந்தவர்களில் சிலர், போலீஸாரை நோக்கிக் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். 

துப்பாக்கிச் சூடு

ஒருகட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாகனங்களுக்குச் சிலர் தீயிட்டுக் கொளுத்தினர். போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், அலுவலகத்தில் இல்லை என்ற தகவல் போராட்டக்காரர்களுக்குத் தெரியவந்தது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தீவிரமடைந்ததால், கூட்டத்தினரை அவசரமாகக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறைக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது என்ற கேள்வி இப்போது பிரதானமாக எழுந்துள்ளது. 

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பின்னால் உளவுத்துறையினர் கோட்டைவிட்டதும், காவல்துறையினர் அவசரப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டத்துக்கு முந்தைய தினமே எத்தனை பேர்போராட்டத்தில் பங்கேற்கப் போகிறார்கள் என்ற விவரங்களை முழுமையாகக் கவனிக்க உளவுத்துறையினர் தவறிவிட்டதாகத் தெரிகிறது. அதேபோல், போராட்டம் உச்சகட்டத்தை எட்டியபோது, வன்முறையை ஒடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால், போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் அது முறைப்படி அனுமதி பெறப்பட்டு நடத்தப்படவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

குறிப்பாக, கலவரக்காரர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டுமானால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியைக் காவல்துறையினர் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நேற்று இருந்த அசாதாரண சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் முதலில் காவல்துறை எந்த அனுமதியையும் பெறவில்லையாம். அதேபோல், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக, ரப்பர் குண்டுகளையே முதலில் பயன்படுத்தி கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும். அதையும் காவல்துறை செய்யவில்லை, காலுக்குக் கீழேதான் சுட வேண்டும் என்ற விதிமுறையையும் போலீஸார் பின்பற்றவில்லை. காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குறிபார்த்து சுடுவதற்கு காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், ஒரு கட்டத்தில் ஃபயரிங் ஆர்டரை மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் பெற்றுள்ளார்கள். அதற்கான அனுமதியை சென்னையிலிருந்து ஒரு முக்கியக் காவல்துறை அதிகாரிதான் வாய்மொழியாக வழங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவசரமாக அந்த உத்தரவை ஏற்று துப்பாக்கிச்சூட்டை நடத்தி முடித்த காவல்துறையினர், அதன்பிறகே மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு `துப்பாக்கிச் சூட்டுக்கு முறையான அனுமதி கடிதம் வேண்டும்' என்று கேட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டம்

கலவரத்தினால் ஏற்கெனவே அப்செட்டாகியிருந்த நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், காவல்துறையினர் தரப்பிலிருந்து ``மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும், சில தமிழ் இயக்கத்தினரும் போராட்டக்காரர்கள் போர்வையில் அவர்களுடன் ஊடுருவி இருந்தனர். அதனால் துப்பாக்கிச் சூடு நடத்துவதை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. உங்கள் அனுமதிக்குக் காத்திருக்கும் நிலையில் நாங்கள் இல்லை. எனவே, இப்போது அனுமதி  கடிதத்தில் கையெழுத்திடுங்கள்” என்று மாவட்ட ஆட்சியரையே பயம் கொள்ள வைத்துள்ளனர் காவல்துறையினர். துப்பாக்கிச் சூடு நடத்தி முடித்த பிறகே அதற்கான அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், உயர் ரக தானியங்கித் துப்பாக்கியை எதற்காகப் பயன்படுத்தினார்கள், குறிபார்த்து சுடும் அளவுக்கு என்ன அவசியம் எழுந்தது? போன்ற விவரங்களை முதல்வர் அலுவலகத்திலிருந்து கேட்டுள்ளார்களாம். தூத்துக்குடியில் இருக்கும் உளவுத்துறை காவல்துறையினர் இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்கள். அந்த அறிக்கையிலும் ``தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்களும், சில பிரிவினைவாத அமைப்பினரும் வேண்டுமென்றே இந்தக் கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர்" என்று தெரிவித்துள்ளார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, மனித உரிமைகள் ஆணையம் காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் இரண்டு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!