வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (23/05/2018)

கடைசி தொடர்பு:15:45 (23/05/2018)

`அம்மாவும் அப்பாவும் அழாத நாள்களே இல்லை' - 10-ம் வகுப்பில் 402 மார்க் எடுத்த மாணவன் உருக்கம்

குடும்ப வறுமையிலும் பிறவியிலேயே பார்வை இழந்த மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 402 மதிபெண்கள் எடுத்து அசத்தியிருக்கிறான்.

குடும்பத்தில் கடுமையான வறுமை ஒரு பக்கம் பிறவியிலேயே பார்வை இழந்த துன்பம் மறுபக்கம் என வாழ்க்கையில் கஷ்டங்கள் வாட்டி வதைத்த நிலையிலும் இன்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 402 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியிருக்கிறான் எட்வின் நிஜார் என்ற மாணவன்.

தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் எட்வின் நிஜார். இவரும் இவரின் தங்கை அபர்ணாவும் பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள். இவரின் தந்தை செபஸ்தியான் விவசாயக் கூலித் தொழிலாளி. ஏற்கெனவே காவிரியில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் வருமானம் இழந்து சொந்தமாக நிலங்களை வைத்திருப்பவர்களே பொருளாதாரத்தில் கடும் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தொடர்ச்சியாக வேலை இல்லாததால் விவசாயக் கூலித் தொழிலாளியான செபஸ்தியான் நிலையோ இன்னும் மோசம். அதுவும் கண் பார்வை இல்லாத தன் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையோடு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

இப்போதைக்கு அவருக்கு உள்ள ஒரே ஆறுதல் அவர் மகன் எட்வின் நிஜார். இவர் பத்தாம் வகுப்பு தேர்வில் 402 மார்க் எடுத்து பள்ளி அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அவருக்கு பாராட்டுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு எட்வின் நிஜாரிடம் பேசினோம். ''நான் 5-ம் வகுப்பு வரை ரெகுலர் பள்ளியில்தான் படித்தேன். மற்ற மாணவர்களைப்போல் என்னால் இருக்க முடியாமல் போனதை நினைத்து என் தந்தை மிகுந்த கவலை கொள்வார். ஆண்டவன் என் பிள்ளைகளுக்கு மிகப் பெரிய குறையைக் கொடுத்துவிட்டானே என அடிக்கடி புலம்புவார். என்னோடு சேர்த்து என் தங்கைக்கும் பிறவியிலேயே பார்வை இல்லாமல் போனது இன்னொறு வேதனை. இதை நினைத்து என் அம்மாவும் அப்பாவும் குலுங்கி அழாத நாள்களே இல்லை.

இந்த நிலையில் எங்கள் இருவரையும் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார். அப்போதில் இருந்தே ஒரே வைராக்கியத்தோடு படிக்க ஆரம்பித்தேன். கண் ஒளிதான் இல்லாமல் போச்சு; கல்வி ஒளியையாவது சரியாக கிடைக்க வேண்டும். கல்வி ஒளியின் மூலம் அப்பாவோட வாழ்க்கையின் வறுமையையும் சேர்த்து மனதின் வலியையும் விரட்ட வேண்டும் எனப் போராடிக்கொண்டிருக்கிறேன். அதற்கான முதல் கட்டத்தில்தான் நான் இருக்கிறேன். இன்று என் அப்பாவையும் அம்மாவையும் எல்லோரும் பாராட்டுறாங்க. அப்போது அவர்கள் முகம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், வார்த்தைகளால் உணர்கிறேன். இது தொடர வேண்டும். அதற்கு இன்னும் நன்றாகப் படித்து நல்ல மார்க் எடுப்பதுடன் நல்ல வேலைக்கும் போக வேண்டும். அப்பதான் இந்த மகிழ்ச்சி நிரந்தரமாகும்'' என அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டு பேசுகிறார்.

''என் பிள்ளை அடிக்கடி சொல்வான்; அப்பா, நீ எப்பவும் எங்களை நினைச்சு கலங்கிகிட்டே இருக்க. உன்னையும் அம்மாவையும் மகிழ்ச்சியா வச்சுக்கணும். நான் படித்து பெரிய ஆளா வருவேன். நீ கவலைப்படாதப்பா என்பான். சொன்னது போலவே இப்படிபட்ட நிலையிலும் நல்ல மார்க் எடுத்திருக்கான் என மனதார எல்லோரும் பாராட்டுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பள்ளியில் எல்லாமே இலவசம் தான் என்றாலும் இன்னும் கொஞ்சம் யாரேனும் உதவிகள் செய்தால்  நல்லா படிக்க வேண்டும் என்கிற அவன் கனவை நனவாக்கிடுவேன். என்னால பார்வைதான் கொடுக்க முடியலை. நல்ல படிப்பையாவது கொடுக்க வேண்டும்'' என வாஞ்சையோடு தன் மகனை தட்டிக் கொடுத்தபடி சொல்லும் செபஸ்தியான் கண்கள் கசிகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க