`போலீஸ்மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ - சூடுபிடிக்கும் ஸ்டெர்லைட் விவகாரம்

‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய `போலீஸ்மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை. அதில் பெண்கள் உட்பட 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் போராட்டக் களங்களாக மாறியிருக்கின்றன தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறை நிகழ்த்திய படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது திராவிடர் விடுதலைக் கழகம். புதுச்சேரியின் பிரதான சாலைகளில் ஒன்றான புஸ்ஸி வீதியில் நடைபெற்ற அந்தச் சாலை மறியல் போராட்டத்தில் கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டனர். அப்போது மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பிய அவர்கள், பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தது போலீஸ்.

திராவிடர் விடுதலைக் கழகம்

அப்போது நம்மிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், “நச்சுகளை கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி பொதுமக்கள் 100 நாள்களாக அறவழிப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அவர்களுக்குள் பேசி எடுக்கப்பட்ட முடிவின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட அமைதிப் பேரணியை மேற்கொண்டனர். மீனவர்கள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள், கூலித் தொழிலாளிகள், அரசு ஊழியர்கள் எனச் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் அந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். ஆனால், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய நபர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்ட தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் தொலைவிலிருந்து குறிபார்த்துச் சுடுவதற்குப் பயிற்சி பெற்ற போலீஸைக் களத்தில் இறக்கி இந்தப் படுகொலையை அரங்கேற்றியிருக்கின்றன.

பெருமுதலாளிகளுக்கு எதிராக இனி போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் கதி என்பதை உணர்த்துவதற்காகவே இந்தப் படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது மோடியின் பினாமியான எடப்பாடி அரசு. பெண்கள் என்றுகூடப் பாராமல் குருவிகள்போல அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். அதனால் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும். அதேபோல திட்டமிட்டப் படுகொலையை நிகழ்த்திய போலீஸார்மீது கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அதற்கு துணைபோன மாவட்ட ஆட்சியர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து நச்சு கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தத் தொழிற்சாலையையும் மக்களின் எதிர்ப்பை மீறி எங்கேயும் இனி நிறுவக் கூடாது. இந்தச் சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் நச்சு தொழிற்சாலைகளை உடனே இழுத்து மூட வேண்டும்” என்றார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!