வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (23/05/2018)

கடைசி தொடர்பு:17:31 (23/05/2018)

ரத்தன் டாடாவின் கனவு முடிந்துவிட்டது... இண்டிகா இனி இல்லை

20 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்தது டாடா இண்டிகாவின் பயணம். இனி டாடா இண்டிகா/இண்டிகோ விற்பனைக்கு இல்லை.

எல்லா கார்களுமே ஒரு கனவிலிருந்து உருவாவதுதான். அப்படி ஒரு பவர்ஃபுல் கனவிலிருந்து உருவாகி, 2 தசாப்தங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த ரத்தன் டாடாவின் கனவு வாகனமாக இண்டிகாவின் விற்பனை இப்போது முடிந்துவிட்டது.

டாடா இன்டிகா

1998-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறை காட்சிப்படுத்தப்பட்டது இந்த கார் முழுவதும் இந்தியாவில் டிசைன் செய்யப்பட்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அப்போது விற்பனையில் அசத்திக்கொண்டிருந்த மாருதி 800-க்கு மாற்றாகச் சந்தைக்குள் வந்தது. அதே ஆண்டு, டிசம்பர் மாதம் வெளியான இண்டிகா, மாருதி 800 விட அதிக இடவசதிமட்டுமல்ல, அதை விட ரூ.30,000 விலை குறைவாகவும் கிடைத்தது. 

மாற்றமடைந்து வரும் கார் சந்தை மற்றும் டாடாவின் டிசைனை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். இண்டிகா மற்றும் இண்டிகோ eCS கார்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டாலும், இந்தக் கார்களுக்கான சர்வீஸ் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

டாடா இன்டிகோ

இண்டிகா மற்றும் இண்டிகோவின் கடைசி அப்டேட் 2013-ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு, எந்த அப்டேட்டட் மாடலும் வரவில்லை. இந்தியாவில் வந்த முதல் காம்பாக்ட் செடான் என்ற பெருமை இண்டிகோ eCS காருக்கு உண்டு. கடைசி இரண்டு ஆண்டுகளாக வெறும் இண்டிகா மற்றும் இண்டிகோவின் டாக்ஸி மாடல்கள் மட்டுமே விற்பனையாகிக்கொண்டிருந்தது.