`இனி ஒரு நிமிடம்கூட ஆட்சியில் நீடிக்க எடப்பாடிக்கு உரிமை இல்லை' - ஜவாஹிருல்லா காட்டம்!

ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத நிகழ்வுகளெல்லாம் தூத்துக்குடியில் நடைபெற்று வருவது சொல்லொண்ணா துன்பத்தை அளித்து வருகின்றது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்  ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

ஜவாஹிருல்லா

தூத்துக்குடியில் இன்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற இளைஞர் பலியாகியுள்ளார். நேற்று பலியானவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள் வாங்க மறுத்தபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின்போது காளியப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, இச்சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``ஒரு பன்னாட்டு பெரு முதலாளி நிறுவனத்தைக் காப்பதற்காக அப்பாவி தமிழர்கள் கொத்துக் கொத்தாகத் தூத்துக்குடியில் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், இரு சிறுவர்கள் உட்பட இறந்தவர்களின் எண்ணிக்கை 15ஐ தாண்டும் என்று களத்தில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அரச பயங்கரவாதத்தின் தொடர்ச்சியாக இன்றும் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு சிலர் கொல்லப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி தமிழக மக்கள் உள்ளங்களையெல்லாம் ரணகளமாக்கியுள்ளது.

இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராடி வரும் மக்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் திட்டத்துடன் மத்திய பா.ஜ.க அரசின் எடுபிடியாகச் செயல்படும் எடப்பாடி அரசு செயல்பட்டு வருவது வெளிப்படையாகத் தெரிகின்றது. தூத்துக்குடியில் நடைபெற்றதுபோல் வேறு எங்கும் மக்களைப் படுகொலைச் செய்யும் செயலில் எந்தவொரு மாநில அரசுத் திட்டமிட்டு செயல்பட்டதில்லை. சட்டம் ஒழுங்கைப் பேண கடமைப்பட்டுள்ள காவல்துறை சட்ட விதிகளை மீறி போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களைக் குறிவைத்து சுட்டுத் தள்ளியுள்ளனர். சீருடை அணியாமல் ஒரு கொலைகார கும்பலைப்போல் காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், நாம் இருப்பது ஜனநாயக நாட்டிலா அல்லது ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் ஆளும் நாட்டிலா என்ற கேள்வியைச் சாதாரண மக்கள் உள்ளத்திலும் எழுப்பியுள்ளது. 

சிறுவர், பதின்பருவத்தினரைக்கூட விட்டு வைக்காமல் காவல்துறையை ஏவி காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசு, இனி ஒரு நிமிடம்கூட பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்க்கச் சென்ற அரசியல் தலைவர்கள்மீது வழக்கு பதிவு செய்திருப்பது எடப்பாடி அரசின் குரூர புத்தியை வெளிப்படுத்தியுள்ளது. இன்று தூத்துக்குடியில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கி, மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை அழித்தொழிக்கும் செயலில்தான் எடப்பாடி அரசு ஈடுபட்டுள்ளது. தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தி.மு.க தலைமையிலான தோழமைக் கட்சிகள் வரும் மே 25 (வெள்ளி) அன்று நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்குகொண்டு அறவழியில் போராட வருமாறு அனைவரையும்  கேட்டுக் கொள்கிறேன்" என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!