வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (23/05/2018)

கடைசி தொடர்பு:21:20 (23/05/2018)

`மத்திய அரசு இதைச் செய்யாது' - சொல்கிறார் ப.சிதம்பரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசால் குறைக்க முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ப சிதம்பரம்

கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி கடந்த இரண்டு வாரங்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு, கடந்த ஒன்பது நாளாகத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது உயர்ந்து வருகிறது. இதனால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று கூறுகையில், மத்திய அரசு விரைவில் எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு அறிவிக்கும் என்று தெரிவித்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வு குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `மத்திய அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும். கச்சா எண்ணெய்யின் விலையில் சரிவு ஏற்படும்போது ஒரு லிட்டர் பெட்ரோலில்
15 ரூபாய் மத்திய அரசால் சேமிக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு கூடுதலாக ரூ.10 கலால் வரி விதிக்கிறது. இதனால், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் சராசரியாக 25 ரூபாய், மத்திய அரசுக்குக் கிடைக்கும். எனவே, பெட்ரோல் விலையைத் தாராளமாக மத்திய அரசு குறைக்கலாம். ஆனால், மத்திய அரசு இதைச் செய்யாது. இதற்கு மாறாக, ரூபாய் 1 அல்லது
2 ரூபாயைக் குறைத்து மக்களை ஏமாற்றும்" என்றார்.