வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (23/05/2018)

கடைசி தொடர்பு:21:47 (23/05/2018)

`பேசுவதற்கு நாக்கில்லை; கேட்பதற்கு காதில்லை' - கொந்தளிக்கும் பேராசிரியர் ஜெயராமன்

மக்களை அச்சுறுத்தும் விதமாகத்தான் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இன்று ஸ்டெர்லைட் நாளை காவிரிப்படுகை என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.

பேராசிரியர் ஜெயராமன்

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது, ``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படக் கூடாது என மக்கள் போராடிட்டு இருக்காங்க. நேத்து 11 பேரை சுட்டு படுகொலை செய்திருப்பதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. 100 வது நாளில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நியாயம் கேட்பது என மக்கள் போனாங்க. நூறுவது நாள் இதுபோன்ற பிரச்னைனா 99 நாள்களாக மாவட்ட ஆட்சியர் என்ன செஞ்சிட்டிருந்தார் என்பது ஒரு கேள்வியாக உள்ளது. மக்கள் போறதுக்கு முன்னாடியே அலுவலகத்தில் தீ பற்றி எரிகிறது என்றால் என்ன பொருள்? திட்டமிட்டபடி மக்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த 11 பேரும் ஏதோ துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளார்கள் எனச் சாதாரணமாகக் கருதக் கூடாது. இந்தப் துப்பாக்கிச்சூடு என்பதே திட்டமிட்டது என நாங்கள் கருதுகிறோம். அதோடு மட்டுமல்ல அவர்கள் அந்தத் துப்பாக்கியைக் கையாளும் முறைகளிலேயே அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தமிழக காவல்படை அல்ல கமாண்டோக்கள். அவர்கள் துணை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் சாதாரண உடை அணிந்து மப்டியில் இருந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். 

இன்று தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்காகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள். நாளை காவிரிப்படுகையில் துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள் என்பதுதான் உண்மை. அவங்க பயன்படுத்துகின்ற துப்பாக்கி SLR வகை துப்பாக்கி. அவை ஒரே நேரத்தில் 20 குண்டுகளைச் செலுத்தக்கூடியது. ஒரு எதிரியைப் பகை நாட்டவர்களுடன் போராட பயன்படுத்தும் துப்பாக்கியைச் சாதாரண மக்கள்மீது அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் இவர்கள் என்ன நோக்கத்தில் இருக்கிறார்கள். மக்களை அச்சப்படுத்தி இந்த இயற்கை வளங்களைச் சூறையாடும்போது யாரும் தடுக்கக் கூடாது. பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இங்கு வந்து தொழிலகங்களை அமைக்கும் போதும், நிலங்களைப் பிடுங்கும்போதும் யாரும் போராடக் கூடாது என எச்சரிக்கும் விதமாகத்தான் இந்தத் துப்பாக்கிச்சூடு செயலை நாங்கள் கருதுகிறோம். தமிழக அரசின் அணுகுமுறையே தவறானது. செத்துட்டா 10 லட்சம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை என உயிருக்கு விலை வைக்கிறார்கள். 

அவன் எவ்வளவு பேரை வேணும்னாலும் சுட்டுட்டு போவான். அதற்குக் கண்டனம் தெரிவிக்கத் தமிழக அரசுக்குச் சக்தி இல்லாத அளவுக்கு தமிழக அரசு வீழ்ந்துபோய் உள்ளது. யாருடைய அனுமதியின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது. தமிழக அமைச்சரவை அனுமதி கொடுத்ததாகத் தெரியவில்லை. தமிழக காவல்படையும் அனுமதி அளித்ததாகத் தெரியவில்லை. தமிழக மண்ணுக்கும் தமிழக மக்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் இதைக் கையாளுவதாகத் தெரிகிறது. இந்திய அரசுதான் இந்தப் பிரச்னையைக் கையாளுகிறது. தமிழக அரசு இன்னைக்கு மத்திய அரசு சொன்னதை தவிர பேசுவதற்கு நாக்கில்லை, கேட்பதற்கு காதில்லை, பார்ப்பதற்குக் கண்ணில்லை என இருக்கிறது. இவர்கள் மத்தியரசின் கருவியாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது" எனக் கூறினார்.