வெளியிடப்பட்ட நேரம்: 22:04 (23/05/2018)

கடைசி தொடர்பு:22:04 (23/05/2018)

பாய்மரப்படகு மூலம் உலகைச் சுற்றிவந்த இந்தியப் பெண்கள்! 

ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இதற்கேற்ப, இந்தியக் கடற்படையில் பணியாற்றிவரும் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகக் கப்பல் பயணம் மூலம் உலகைச் சுற்றிவந்து சாதனைப் படைத்துள்ளனர். துணிச்சல் நிறைந்த பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய கடற்படை பெண் அதிகாரிகளைப் பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். 

இந்தியப் பெண்கள்

இந்தியக் கடற்பறை பிரிவில் பணியாற்றும் லெப்டினன்ட் கமாண்டர் வர்திஜா ஜோதி, கமாண்டர் பிரதிபாஜம்வால், ஸ்வாதி, ஐஸ்வரியா போடாபதி, விஜய தேவி மற்றும் பாயல் குப்தா ஆகியோர் கொண்ட குழு ஆண்கள் துணையின்றி பாய்மரக் கப்பல் மூலம் உலகைச் சுற்றிவர தீர்மானித்தனர். இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்களின் பயணத்தைத் தொடங்கினர். மத்தியப் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடி அசைத்துப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். 

கடல் வழிப் பயணத்தை மேற்கொண்ட குழு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் மற்றும் ஃபாக்லண்டஸ் உள்ளிட்ட நாடுகளின் வழியில் பயணம் செய்தனர். ஆறு கட்டங்களாக் கடல் வழிப்பயணம் மேற்கொண்டனர். சுமார் எட்டு மாதங்கள் கடல் வழியாக உலகைச் சுற்றினர். லெப்டினன்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான குழு இந்தச் சாதனையைப் புரிந்துள்ளது. 

கடல் சுற்றுப்பயணம் முடித்து நேற்றுமுன் தினம் நாடு திரும்பிய இவர்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பா வரவேற்றனர். இந்நிலையில், படகுப் பயணம் மூலம் எட்டு மாதங்களில் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்த இந்தியக் கடற்படை வீராங்கனைகள் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் அவர்களிடம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு விஷயங்களைக் கலந்து ஆலோசித்தார்.