வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/05/2018)

கடைசி தொடர்பு:06:55 (24/05/2018)

டாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவிகிதம் வளர்ச்சி..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.2,175.16 கோடியாக குறைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.2,175.16 கோடியாக குறைந்துள்ளது. 2016-17 ம் நிதியாண்டில் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.4,338. 43 கோடியாக அதிகரித்து இருந்தது. இந்நிறுவனத்தின் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடல் கார்களின் விற்பனை குறைந்த காரணத்தால், இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 15.9 சதவிகிதம் அதிகரித்து ரூ. 78, 746.61 கோடியிலிருந்து ரூ.91, 279 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.

மார்ச் மாத காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,748 கோடியாகவும், நிகர விற்பனை ரூ.88,196 கோடியாகவும் இருக்கும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் மதிப்பிட்டிருந்தனர். இந்நிறுவனத்தின்  மொத்த லாபத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனையின் பங்களிப்பு 80 சதவிகிதமாக உள்ளது.

இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனை 3.8 சதவிகிதம் குறைந்து 172, 709 ஆக குறைந்துள்ளது. இதில் குறிப்பாக ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த மாடல் கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. சீனாவிலும் இந்த மாடல் கார்கள் விற்பனை 11 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவில் இந்த மாடல் கார்கள் விற்பனை 3.48 சதவிகிதம் உயர்ந்து 36, 325 கோடியாக உயர்ந்துள்ளது.

விற்பனை

மார்ச் மாத காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.805.93 கோடியாக சரிந்துள்ளது. நிறுவனத்தின் லாபத்தில் உள்நாட்டு செயல்பாடுகள் மூலமான 45 சதவிகிதம் உயர்ந்து  ரூ19,779 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.