``என் வீட்டம்மாவுக்கு ரத்தம் கொட்டுறது இன்னும் நிக்கல!" தூத்துக்குடியில் கதறும் கணவர் | Husband explains what happened to his wife during sterlite protest

வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (24/05/2018)

கடைசி தொடர்பு:09:43 (24/05/2018)

``என் வீட்டம்மாவுக்கு ரத்தம் கொட்டுறது இன்னும் நிக்கல!" தூத்துக்குடியில் கதறும் கணவர்

தூத்துக்குடி போராட்டம்

துவரை 12 நபர்கள் பலி... நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து தீவிர சிகிச்சை... ஆனால், சரியான கணக்கு இன்னும் தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரச பயங்கரவாதம் சூழ்ந்துள்ளது. உரிமைக்காகப் போராடும் அப்பாவிப் பொதுமக்களைத் துப்பாக்கியால் வேட்டையாடி வருகின்றனர் போலீஸார். `போராட்டக்காரர்களைக் கலைக்கவேண்டும், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்' என்று தமிழக அரசும், போலீஸாரும் செய்திருக்கும் செயல் ஜனநாயகத்துக்கான செருப்படி. துப்பாக்கிச் சூடும், லத்தி அடிகளும் நின்றுவிடவில்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு கூடிய உறவினர்கள், இறந்தவர்களின் சடலங்களை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், மருத்துவமனை முன்பு கூடியவர்களைக் கலைப்பதற்காக மீண்டும் துப்பாக்கி பலத்தையும், லத்தி பலத்தையும் நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி மக்களிடம் காட்டி வருகிறது காவல்துறை. திரேஸ்புரம், பாத்திமா நகர், மாதா கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பல கொடூரச் செயல்களை போலீஸார் செய்துள்ளனர். இந்தத் தகவல்கள் யாவும் மக்களிடம் செல்லக் கூடாது எனத் தமிழக அரசு அதற்குண்டான முயற்சிகள் அனைத்தையும் செய்துவருவதுதான் அரச பயங்கரவாதத்தின் உச்சம். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அப்பாவிப் பொதுமக்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் தாக்குதலில் மக்களின் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி படுகொலை

போலீஸாரின் கடுமையான தாக்குதலில் காயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பெண் ஒருவரின் கணவர் பாக்யராஜ் நம்மிடம் பேசியபோது, `` செவ்வாய் காலை (22-05-2018) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அமைதியான முறையில் மக்கள் சென்று கொண்டிருந்தனர். அங்கு எங்களைத் தடுத்தக் காவல்துறையினர்தான் முதலில் தாக்கத் தொடங்கினர். அதுவும் குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் சரமாரியாக போலீஸார் தாக்கினார்கள். அவர்களைப் பாதுகாப்பதற்காகவே பேரணியில் சென்ற ஆண்கள் அனைவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று போலீஸார், குழுமியிருந்த அனைவரையுமே தடியால் அடிக்கத் தொடங்கினார்கள். போராட்டக்காரர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த நிலையில், திடீரென்று துப்பாக்கிச் சத்தம்... எங்கு பார்த்தாலும் ரத்த வெள்ளம். அந்த நேரத்தில் நான்கு போலீஸார், என் மனைவியின் வயிற்றில் லத்தியால் அடித்தார்கள். தடுக்கச்சென்ற என்னையும் பலமாகத் தாக்கினார்கள். என் மனைவிக்கு வயிற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. 108 ஆம்புலன்ஸுக்கு போன்  செய்தேன். அவர்கள் கலவரத்தைக் காரணம்காட்டி வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அரசு மருத்துவமனை, சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

வேறு வழியில்லாமல் நானும், இன்னொரு நபரும் சேர்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த என் மனைவியை மீட்டு, சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சுற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். மருத்துவமனைக்குச் செல்லும் வழிநெடுகிலும் போலீஸார் பொதுமக்களைத் தாக்கியவண்ணமே இருந்தனர். மருத்துவமனையிலும் போலீஸாரின் தாக்குதலில் காயம்பட்டவர்களே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டில் குண்டடிப்பட்டவர்கள். அவர்கள் யாருக்கும் சரியான சிகிச்சைகூட அளிக்கப்படவில்லை. படுகாயமடைந்த பலரை அவர்களின் உறவினர்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவனைகளுக்குக் கொண்டு சென்றுவிட்டனர். அரசு மருத்துவமனையைச் சுற்றி போலீஸார் இருப்பதால் யாரும் மருத்துவமனையை விட்டு வெளியே சென்று உணவுப் பொருள் ஏதும் வாங்க முடியவில்லை. இறந்தவர்களின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பதால் காவல்துறையினர், அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். என் மனைவிக்குக் காயத்தினால் ஏற்பட்ட ரத்தப்போக்கு இன்னமும் நிற்கவில்லை. என் மனைவி விரைவில் நலம் பெற வேண்டும் என்பதுதான் இப்போதைய வேண்டுதல். எந்தளவு கஷ்டமானாலும் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் அதுவே எங்களுக்குப் போதும். எங்கள் வருங்காலச் சந்ததியினர் நலமுடன் வாழவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்" என்றார் கண்ணீருடன். 

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலீஸாரின் தாக்குதல் மற்றும் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரபுவிடம் பேசினோம்.

``தமிழக அரசும், அதன் அடியாட்களான காவல்துறையும் தங்கள் மாநிலமக்களையே குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றன. செவ்வாய் இரவு திரேஸ்புரம், பாத்திமா நகர், மாதா கோவில் பகுதிகள் அனைத்திலும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் போலீஸார் செய்த கொடூரங்களைச் சொல்லி மாளாது. ஒவ்வொரு வீடாகச் சென்று, அங்கிருந்த ஆண்களை அடித்து இழுத்துச் சென்றனர். பெண்களைக் கொடூரமாகத் தாக்கினார்கள். வேறு சிலரை அடித்து, அவர்களின் கை கால்களை உடைத்து, ரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்க இழுத்துச் சென்றனர். அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. வெளியுலகத் தொடர்பு என்பதே இப்போதுவரை இல்லை. இந்தியா ஜனநாயக நாடு என்ற எண்ணமே எங்களுக்குப் போய்விட்டது. தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களைத் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்று ஒழிக்கும் சர்வாதிகார நாடாக மாறிவிட்டது தமிழகம். எங்களை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்வரை எங்களின் போராட்டம் ஓயாது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்