வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (24/05/2018)

கடைசி தொடர்பு:09:52 (24/05/2018)

கொடைக்கானல் மெர்க்குரி ஆலையின் விளக்கங்களும் விகடனின் சில கேள்விகளும்..!

ஐ.நா விதிகளின்படி சுத்தம் செய்யவேண்டிய அளவு 20 மைக்ரோ கிராம்கள் என்றிருக்க, நீங்கள் சுத்தம் செய்யும் அளவு ஏன் 20 மில்லி கிராம்களாக இருக்கின்றன? இது சர்வதேச அளவைவிட அதிகம் அல்லவா?

கொடைக்கானல் மெர்க்குரி ஆலையின் விளக்கங்களும் விகடனின் சில கேள்விகளும்..!

கடந்த மாதம் 23 ம் தேதியில் கொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்! என்ற தலைப்பில் நமது விகடன் டாட் காம்- இல் கொடைக்கானல் மெர்க்குரி ஆலையால் ஏற்பட்ட பிரச்னைகள் அதன் வரலாறு மற்றும் அதனால் விளைந்த சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் அதன் தற்போதைய நிலையும் விரிவாகப் பேசப்பட்டது. அந்த ஆலையின் உரிமம் பெற்ற ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் அதன் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தனர். அதைத் தொடந்து விகடன் சார்பில் அவர்களிடம் சில கேள்விகள் மின்னஞ்சல் மூலம் முன்வைக்கப்பட்டன.

victims of HUL


நிறுவனத்தின் விளக்கம்:

ஏப்ரல் மாதம் 23 ம் தேதி வெளியிடப்பட்ட கட்டுரையில் பல தவறான விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றிய உண்மைகளை நிறுவனத்தின் சார்பாகத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

2001 ம் ஆண்டு மூடப்பட்ட மெர்க்குரி ஆலையில் மூடப்படுவதற்கு முன் பணிபுரிந்த ஊழியர்களுக்கோ அவர்களைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது அந்தத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த குடியிருப்புவாசிகளுக்கோ உடல்நிலையில் மெர்க்குரி ஆலையால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. தொழிற்சாலையில் பணிபுரிந்த காரணத்தால் எந்தவித உடல்நலக் கோளாறுகளும் பணியாளர்களுக்கு ஏற்படவில்லை என்பதை நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் தெளிவுபடுத்துகின்றன. அவற்றோடு ஆலை மூடப்பட்ட பிறகு வெளிப்படையாக நடத்தப்பட்ட நான்கு கட்ட ஆய்வுகளிலும் அத்தகைய விடயங்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. 

Mercury contaminated fish


கடந்த 15 வருடங்களாகப் பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் கொடைக்கானல் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்புகளும் மெர்க்குரி ஆலையால் ஏற்படவில்லை என்பதையும் நிரூபித்துள்ளோம். தொழிற்சாலைக்குச் சொந்தமான பகுதிகளைத் தவிர வேறு எங்கும் மண்ணில் மெர்க்குரிக் கழிவுகளால் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அதன் அளவு இல்லை என்பதை 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசியச் சுற்றுச்சூழல் ஆய்வகம் நடத்திய ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. ஆலை வளாகத்திற்குள் மட்டுமே நிலத்தில் மெர்க்குரிக் கழிவுகள் கலந்திருக்கின்றன. அதுவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறிய 20 mg/kg of soil என்ற அளவைவிடக் குறைவாகவே இருக்கிறது. அதையும் சுத்தப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தேசிய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கவனத்துக்கு உட்பட்டுத்தான் இவை அனைத்தையுமே செய்து வருகிறோம். அந்த அமைப்பு தேசியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஓர் அங்கமாகும். இவை அனைத்துமே உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் தலைமையிலேயே நடந்து வருகின்றன.

கொடைக்கானல்

விகடன் கேட்ட கேள்விகள்:

தொழிற்சாலையைத் தவிர வேறு எங்கும் மெர்க்குரிக் கழிவுகள் இல்லை என்று உங்கள் விளக்கத்தில் பதிலளித்துள்ளீர்கள். ஆனால் பாம்பாறு சோலை, பெரியகுளம் போன்ற நீர்நிலைகளிலும், அதில் வாழும் மீன்களிலும் மெர்க்குரிக் கழிவுகளும், அவற்றால் பாதிப்பும் இருப்பது உயர் நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் வரைபடத்தோடு விவரித்துள்ளனர்.

Contaminated sites

மெர்க்குரித் தொழிற்சாலையாலும், அதன் கழிவுகளாலும் கொடைக்கானல் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், Prima facie எனப்படும் முதற்கட்ட ஆய்விலேயே பார்த்தவுடன் தெரியக்கூடிய அளவில் அங்கு பணிபுரிந்தவர்களுக்கும், அவர்களது குழந்தைகள், உறவினர்கள், ஆலையைச் சுற்றியுள்ள பொதுமக்கள் என்று அனைவரிடமும் உடல் பாதிப்புகள் மெர்க்குரி ஆலையால் ஏற்பட்டிருப்பதாகத் தமிழகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய ஆய்வில் பதிவு செய்துள்ளனர். அந்த ஆய்வு முடிவுகளையும் இத்தோடு இணைத்துள்ளோம்.

பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல்


மேற்கூறிய ஆதாரங்களுக்கு விளக்கமும், மேலும் சில கேள்விகளையும் கேட்க விரும்புகிறோம்.

-இந்த மெர்க்குரி நிறுவனம், சீஸ்போரோக்-பாண்ட்ஸ் ( Cheeseborough-Ponds) என்ற வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டது தானா?

-அந்த நிறுவனம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தடைசெய்யப்பட்டிருப்பது உண்மையா?

-அது உண்மையென்றால் வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலையை எதற்காக இந்தியாவிற்குள் கொண்டு வந்தீர்கள்?

-ஐ.நா விதிகளின்படி சுத்தம் செய்யவேண்டிய அளவு 20 மைக்ரோ கிராம்கள் என்றிருக்க, நீங்கள் சுத்தம் செய்யும் அளவு ஏன் 20 மில்லி கிராம்களாக இருக்கின்றன? இது சர்வதேச அளவைவிட அதிகம் அல்லவா?

சுவாசத்தில் மெர்க்குரி


ஏப்ரல் 30 ம் தேதி ஹிந்துஸ்தான் நிறுவனம் விளக்கமளித்தார்கள். மே 4 ம் தேதி விகடன் சார்பாக மேற்கூறிய கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. 20 நாள்களாக அவர்களது பதிலுக்குக் காத்திருக்கிறோம். இன்னும் வரவில்லை. இனிமேல் மேற்கூறிய ஆதாரங்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தாலும் அதை வெளியிட விகடன் தயாராக உள்ளது.