வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (24/05/2018)

கடைசி தொடர்பு:09:39 (24/05/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - அனைத்துக்கட்சி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் தி.மு.க உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கி

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மொத்தக் கவனமும் தற்போது தூத்துக்குடி பக்கம் திரும்பியுள்ளது. அங்கு நடந்த கலவரத்தில் காவல்துறையினர் தங்களில் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திவிட்டதாகவும், அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல் படுவதாகவும், தமிழகம் உட்பட வெளி மாநில அரசியல் தலைவர்கள் பலர் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தி.மு.க வெளியிட்டுள்ள அறிகையில், ‘ சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தாக உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம், அ.தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் போன்ற கோரிகைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமாக நடைபெறும்’ எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும்,  இந்தப் போராட்டத்தில் தொண்டர்கள், வணிகர்கள், இளைஞர்கள் என அனைவரும் திரளாக பங்கேற்க வாருங்கள் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.