ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜிக்னேஷ் மேவானி. 

ஜிக்னேஷ் மேவானி

நேற்று சமூகவலைதளங்கள், ஊடகங்கள் என அனைத்திலும் பேசப்பட்ட இரு பெரும் விஷயங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா. 

ஒரு புறம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். போலீஸ்காரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் நடந்த வண்ணம் உள்ளதால் அங்குத் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமைதியற்ற சூழ்நிலை நிலவிவருகிறது.

மற்றொரு புறம் கர்நாடகாவில் ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் இருந்தது நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அரசியலில் நடந்த ஒரு சிறப்பான நிகழ்வாகக் கருதப்பட்டது. 

இந்த இரு சம்பவங்களையும் இணைத்து குஜராத் எம்.எல்.ஏ ஜிகேஷ் மேவானி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ``குமாரசுவாமி  பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார். 

ஜிக்னேஷ் மேவானியின் இந்தப் பதிவு தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இவரின் பதிவுக்கு வரவேற்பு தெரிவித்து பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!