"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்!"  - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை

' தேவகவுடாவுக்குக் கிடைத்த வெற்றியைப் போல, தமிழ்நாட்டிலும் நாம் சாதிப்போம். அகில இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் பா.ம.க ஈர்க்கும்' எனப்  பேசியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். 

ராமதாஸ்

ர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் குமாரசாமி. ' தேவகவுடாவுக்குக் கிடைத்த வெற்றியைப் போல, தமிழ்நாட்டிலும் நாம் சாதிப்போம். அகில இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் பா.ம.க ஈர்க்கும்' எனப்  பேசியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேசிய கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்ததன் மூலம், மூன்றாவது அணிக்கான கனவுகள் முற்றுப் பெற்று வருகின்றன. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அகில இந்திய அளவில் பா.ஜ.க எதிர்ப்பு அணியை உருவாக்கி வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அதேநேரம், 37 தொகுதிகளில் மட்டும் வென்றுவிட்டு, கர்நாடகாவின் 24-வது முதலமைச்சராகக் குமாரசாமி பதவியேற்றுக் கொண்டதை ஆச்சர்யத்துடன் கவனித்து வருகிறார் ராமதாஸ். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், ' இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் பெயராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பெயர் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் நம்மையும் இப்படித்தான் பேசுவார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 5 சதவிகித வாக்குகளைப் பெற்றோம். கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோதே இவ்வளவு ஓட்டுக்களை நம்மால் எடுக்க முடிந்தது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கருணாநிதியும் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துவிட்டார். அவர்கள் இப்போது இல்லாததால் இன்னும் அதிகளவு வாக்குகள், நமக்கு வந்துசேரும். வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய தயவு இல்லாமல் யாரும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. தேவகவுடா கட்சியைப் போல, 38 இடங்களை நாம் பெற்றுவிட்டால், அதிகாரம் நம்மை நோக்கி வரும். உறுதியாக நாம் ஆட்சியில் அமர்வோம். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொருவருக்கு செல்வாக்கு உள்ளது. இத்தனை ஆண்டுகளாக தாக்குப்பிடித்து பையனை சி.எம் ஆக்கிவிட்டார் தேவகவுடா. மற்ற சமூகங்களைவிட நாம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக மாறுவோம். அதை நோக்கி நம்முடைய அரசியல் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்' எனப் பேசியிருக்கிறார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``கடந்த சட்டமன்றத் தேர்தலைத் தனியாக எதிர்கொண்டதால்தான், பா.ம.கவால் இந்தளவுக்கு வாக்குகளைப் பெற முடிந்தது. தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்று என்ற முழக்கம், சமுதாயத்தில் நல்ல பலனைத் தேடிக் கொடுத்தது. மீண்டும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறார் மருத்துவர். அவரது இந்தக் கருத்தை அன்புமணி ஏற்றுக்கொள்ளவில்லை. ' கூட்டணி வைத்தால்தான் நாடாளுமன்றத்துக்குள் நம்மால் செல்ல முடியும். கடந்த தேர்தலில் இருந்ததுபோல, இந்தத் தேர்தலில் மோடி அலை இருக்கப் போவதில்லை. காங்கிரஸ் அணியில் நாம் இருப்பதே சிறந்தது' எனக் கூறியிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த ராமதாஸ், ' அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம். நம்முடைய தலைமையில் அணி அமைய வேண்டிய சூழல் வரும்' எனத் தெரிவித்தார். கர்நாடக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார் மருத்துவர். 'சமுதாய வாக்குகளை ஒன்றிணைத்தாலே வெற்றியைக் குவித்துவிட முடியும்' என உறுதியாக நம்புகிறார். அதற்கேற்ப நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்" என்றார் விரிவாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!