``குடும்பத்தோடு போராட்டத்துக்கு வந்தோம், தங்கச்சியை இழந்து தவிக்கிறோம்!" ஸ்னோலினின் அண்ணன் கதறல் | ”We went to sterlite protest as a family; now I lost my beloved sister", cries Snolin's brother

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (24/05/2018)

கடைசி தொடர்பு:14:10 (24/05/2018)

``குடும்பத்தோடு போராட்டத்துக்கு வந்தோம், தங்கச்சியை இழந்து தவிக்கிறோம்!" ஸ்னோலினின் அண்ணன் கதறல்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 நாள்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்திருக்கிறது. காவல்துறையினர் மீது கல்வீச்சு, பொதுமக்கள் வன்முறை என அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்லி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஸ்னோலின் வெனிஸ்டா என்ற சிறுமியும் இதில் அடக்கம் என்பதுதான் வேதனையின் உச்சம்.

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஸ்னோலின் வெனிஸ்டா. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாகச் சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஸ்னோலினின் தாடைப்பகுதியில் குண்டு பாய்ந்தது. தாடையில் பாய்ந்த குண்டானது கழுத்துப் பகுதி வரை காயத்தை ஏற்படுத்த சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது. சிறுமியின் உடலை காவல்துறையினர் எட்டி உதைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தங்கையைப் பறிகொடுத்த துயரம் நெஞ்சடைக்கப் பேசுகிறார், ஸ்னோலினின் சகோதரர் காட்வின்.

ஸ்னோலின் வெனிஸ்டா

``அம்மா, என் ஏழு மாசக் குழந்தை, மூணு வயசுப் பொண்ணு, தங்கச்சி, என் மனைவி எனக் குடும்பமே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பேரணியில் கலந்துகிட்டோம். `ஸ்டெர்லைட் ஒழிக'னு கோஷங்களை எழுப்பிட்டே கலெக்டர் ஆஃபீஸை கூட்டம் நெருங்கிட்டிருந்துச்சு. அமைதியாகத்தான் போயிட்டிருந்தோம். கலெக்டர் ஆஃபீஸை நெருங்கினதும், கண்ணீர்ப் புகைக்குண்டு வெடிக்குது. `முகமெல்லாம் எரியுதுப்பா'னு அம்மா கத்தறாங்க. கூட்டம் கலைஞ்சு ஓடுது. கண்மூடி கண்திறக்குறதுக்குள்ளே தொடர்ந்து புகைக்குண்டுகள் வெடிக்குது. நிதானிக்கிறதுக்குள்ளே துப்பாக்கிச் சூட்டை ஆரம்பிச்சுட்டாங்க. அந்தக் களேபரத்துல என மனைவியையும் தங்கச்சியையும் காணலை. அம்மாவையும் குழந்தைகளையும் மட்டும்தான் என்னால் பாதுகாப்பா கொஞ்சம் தூரத்துக்குக் கூட்டிட்டு வரமுடிஞ்சது. கொஞ்ச நேரத்துல துப்பாக்கிச் சூட்டில் காயமானவங்களைத் தூக்கிட்டு வரிசையா ஆம்புலன்ஸ் வண்டிங்க எங்களைத் தாண்டி போயிட்டிருந்துச்சு. அடுத்த ஒரு மணி நேரத்தில் செய்தியில் வந்த போட்டாவைப் பார்த்துதான் குண்டடிபட்டு இறந்ததில் என் தங்கச்சி இருக்கிறதே தெரிஞ்சது. என் மனைவி ஒருத்தங்க வீட்டுல ஒளிஞ்சிருந்து சாய்ந்திரம் அஞ்சு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தாங்க'' எனச் சொல்லும்போதே காட்வின் குரல் நடுங்குகிறது.

``ஆஸ்பத்திரிக்குள்ளே இருந்த தங்கச்சியைப் பார்க்க என் அண்ணன் மட்டும்தான் உள்ளே போகமுடிஞ்சது. புள்ளையைப் பார்த்துப் பதறிப்போய் மடியில்வெச்சு அழுதுட்டிருந்த என் அண்ணன் முதுகில் பிரம்பால் போலீஸ்காரங்க விடாமல் அடிச்சிருக்காங்க. முதுகுல தடம் அப்படியே கெடக்கு. காலையில் புள்ளையைப் பார்க்கப்போனால், பெரியாஸ்பத்திரி வாசலிலேயே அடிச்சு விரட்டறாங்க. வெனிஸ்டா வாயில் காட்டுமிராண்டித்தனமா சுட்டிருக்காங்க. எங்ககிட்ட ஒரு கையெழுத்துகூட வாங்காமல் பிரேதப் பரிசோதனைக்கு உடலை வெச்சிருக்கோம்னு சொல்றாங்க.

ஸ்னோலின்

99 நாள் பச்சைப் புள்ளைகளோடு அமைதியா போராட்டம் பண்ணியிருக்கோம். மாவட்ட நிர்வாகம் எங்களைக் கண்டுக்கலை. ஒரு கட்சியும் ஆதரவு தரலை. இறந்ததும் வைகோ, கீதா ஜீவன்னு ஒவ்வொரு கட்சியா அனுதாபம் தெரிவிக்க வீட்டுக்கு வந்துட்டுப் போறாங்க. திரேஸ்புரத்துல வீட்டுக்கு நடந்துபோயிட்டிருந்த அம்மாவைச் சுட்டுத் தள்ளியிருக்காங்க. மூளை சிதறி ரோட்டுல கெடக்குங்க. எல்லாமே திட்டமிட்டு பண்ணிணதுதான். மாவட்ட கலெக்டரும் எஸ்.பியும்தான் இதுக்கு முக்கியக் காரணம். அடுத்து, துணை ராணுவத்தை இறக்கப்போறாங்களாம். தூத்துக்குடி மக்கள் ஒட்டுமொத்தமா சாகணும்னு இந்த அரசாங்கம் நினைக்குதா? அத்தனை அக்கிரமும் யாரு தலைமையில் நடக்குது, யாரு உத்தரவு கொடுக்கிறா? இந்த மண்ணுல இத்தனை உயிர் போனது அந்த ஆலையை மூடச் சொல்லிதான். இறந்தவங்க உடலை வாங்கி அத்தனை சடங்கும் நாங்க பண்ணிடுவோம். ஆனால், இத்தனை உயிர் போனதுக்கு என்ன அர்த்தம் இருக்கு? ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்க, உடலை நாங்க வாங்கிக்றோம். ஒரு தனியார் கம்பெனிக்காகச் சொந்த மக்களையே அழிக்க துணிஞ்சுட்டாங்க. இன்னும் என்ன வேணும்னாலும் நடக்கட்டும். ஸ்டெர்லைட்டை மூடுறவரை எங்க குரல் ஒலிச்சுட்டே இருக்கும்" எனக் குமுறுகிறார் காட்வின்.

`ஜனநாயகம் என்பது அரசாங்கத்தைக் குறிப்பது மட்டுமல்ல. அது ஒரு கூட்டு வாழ்க்கை முறை. சக மக்களுக்கு மதிப்பும் மாண்பும் அளிக்கும் மனப்போக்கு' என்றார் டாக்டர் அம்பேத்கர். இங்கே ஜனநாயகம் அப்படியா இருக்கிறது?
 


டிரெண்டிங் @ விகடன்