வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (24/05/2018)

கடைசி தொடர்பு:15:37 (24/05/2018)

"இன்டர்நெட் கட் பண்ணிட்டா, சரியா போயிடுமா?" - `இடிந்தகரை' சுந்தரி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 99 நாள்கள் தொடர்ந்து போராடிய பொதுமக்கள், கடந்த செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த கலவரத்தில், காவல்துறையினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் பொதுமக்களைத் திரட்டி நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்ததில் இடிந்தகரை சுந்தரிக்கு மிகப்பெரிய பங்குள்ளது. அவரிடம் தூத்துக்குடியில் நடப்பவை குறித்து பேசினோம்.

"நடக்கிறதையெல்லாம் பார்க்கும்போது வேதனையா இருக்கு. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு நானும் ஒருநாள் போயிருந்தேன். சின்ன குழந்தையிலிருந்து வயசானவங்க வரை உணர்வுபூர்வமாகப் போராட வந்திருந்தாங்க. குறிப்பாக, பெண்கள் நிறைய பேர் இருந்தாங்க. இந்தப் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அத்தனை நாள் அமைதியாத்தானே போராடினாங்க. அப்போதெல்லாம் அவங்ககிட்ட ஓட்டு வாங்கின அரசியல்வாதிங்க வந்து என்ன ஏதுன்னு கேட்டாங்களா. 100 நாளாகியும் தீர்வு கிடைக்கலேன்னு கலெக்டரைப் பார்க்கப் போனது தப்பா. அதுவும் முன்கூட்டியே தங்கள் போராட்டத்தை அறிவிச்சுட்டுத்தானே வந்தாங்க. கலெக்டர் வந்து அவங்ககிட்ட சுமுகமாகப் பேசியிருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்குமா. இப்போ, அநியாயமா இத்தனை பேரைக் கொன்னு குவிச்சிருக்காங்களே... பெண்களையும் சுடறதுக்கு எப்படி மனசு வந்துச்சு. அந்தச் சின்னப் பொண்ணு என்னய்யா வன்முறை செஞ்சுது. அதைப் பார்க்க பார்க்க நமக்கே வேதனையாக இருக்கு. பெத்து வளர்த்தவங்க என்ன பாடுபடுவாங்களோ" என உடைந்து அழுகிறார். 

இடிந்தகரை சுந்தரி ஓரிரு நிமிடங்களில் தன்னைத் தேற்றிக்கொண்டு, "வாயிலும் மார்பிலும் சரியா குறி பார்த்து சுட்டிருக்காங்க. இப்படி குருவிகளைப்போல சுடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இடிந்தகரையிலும் ஒருமுறை போலீஸ் எங்களைக் கலைஞ்சி போகச்சொன்னபோது நாங்க மறுத்துட்டோம். உடனே, கண்ணீர் புகைக்குண்டை வீசினாங்க. நெடி தாங்க முடியாதவங்க கடலுக்குள் குதிச்சாங்க. அதில் சிலருக்கு நீச்சலே தெரியாது. நாங்க ஓடிப்போய் காப்பாத்தினோம். போலீஸ்காரங்க கையில் ஆயுதம் இருக்கு. எங்ககிட்ட ஒண்ணுமில்லே. ஏன்னா, வன்முறைக்கு எந்தச் சூழலிலும் போகக் கூடாதுன்னு உறுதியா இருந்தோம். எங்களைப் போலத்தான் தூத்துக்குடி மக்களும். கலவரம் பண்ண வர்றவங்க இப்படியா குடும்பம் குடும்பமாகவா வருவாங்க?

ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், அணு உலை என மக்களின் உயிருக்கும் இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் திட்டங்கள் எல்லாத்தையும் தமிழ்நாட்டுக்கே கொண்டுவர்றீங்களே... எங்களுக்கு ஒரு பாதிப்புன்னா போராடாமல் வேற என்ன செய்யறதாம். இப்பவும் ஒரு சிலர் குறி வைக்கப்பட்டு சுடப்பட்டதா சொல்லப்படுது. உளவுத்துறை வேலையே அதானே. போராட்டத்தை யார் ஒருங்கிணைக்கிறா... யார் பின்னாடி மக்கள் வருவாங்கனு தெளிவா பட்டியல் போட்டுருவாங்க. எனக்கு என்ன கேள்வின்னா... இத்தனை மக்கள் எதிர்த்த பிறகும் அந்தக் கம்பெனியை எதுக்கு நடத்தணும்? ஒரு தனியார் கம்பெனிக்காக இத்தனை பேரைக் கொல்றது என்ன நியாயம்? இப்போ, இன்டர்நெட்டையும் கட் பண்ணிட்டாங்க. இதுதான் சரியான தீர்வா. மக்களின் கோரிக்கைக்குத் தக்க முடிவை கொண்டுவந்தாலே பிரச்னை தீரும். இடிந்தகரையிலும் ஒரு வாரத்துக்கு இன்டர்நெட்டை கட் பண்ணினாங்க. போன் மூலமாக ஒருத்தர் மாற்றி ஒருத்தருக்கு செய்தி அனுப்பி வெளியுலகத்துக்குக் கொண்டுபோனோம். அதுக்கும் என் மேலே கேஸ் போட்டிருக்காங்க. இத்தனை பேரைக் கொன்றது போதாதுன்னு இப்போ வீடு வீடாகப் போய் இளைஞர்களையும் சின்ன பசங்களையும் பிடிச்சுட்டுப் போறாங்க. இது, தூத்துக்குடி மக்களுக்கான பிரச்னை மட்டுமில்லே, ஒட்டுமொத்த கடற்கரை சார்ந்த மக்களுக்குமானது. அதனால், அரசாங்கம் இதுக்குரிய தீர்வைத் தாமதிக்காமல் எடுக்க வேண்டியது அவசியம்" என்றார் சுந்தரி.

மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.


டிரெண்டிங் @ விகடன்