வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (24/05/2018)

கடைசி தொடர்பு:15:55 (24/05/2018)

44 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன நடராஜர் சிலை! புதிருக்கு விடை அளித்த பொன்.மாணிக்கவேல்

44 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன சிலை அமெரிக்கா மீயூஸியத்தில் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தகவல் தெரிவித்தார்.

பழநி முருகன் கோயிலில், புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேடு, தஞ்சாவூர் பெரியகோயில் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்த சிலைகள் காணாமல்போனதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், மேலும் பல கோயில்களில் சிலைகள் காணாமல் போயுள்ளதாகக் கூறி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பது அனைவரையும்  திகைப்படையச்செய்துள்ளது.

தஞ்சை அருகே உள்ள சிறப்பு மிக்க புன்னைநல்லூர் மாரியம்மன் மற்றும் கைலாசநாதர் கோயிலில், கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் செப்பு சிலையை மாற்றி மோசடிசெய்துள்ளது தொடர்பாக,  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்த புகாரை அடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பிறகு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ''1974-ம் ஆண்டு, கொல்கத்தா விமான நிலையத்தில் ஐம்பொன்னால் ஆன 4 நடராஜர் சிலைகள் பிடிபட்டன.  அந்தச் சிலைகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமானவை என்பது தெரியவந்தது. அதில் ஒன்று, தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்போதே தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், பிடிபட்ட ஒரு நடராஜர் சிலை, அமெரிக்காவில் உள்ள ஒரு மியூசியத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற சிலைகள் எங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை. இதற்கிடையில், சிலைகள்குறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோயில் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் எங்களது அறிவுரையைக் கேட்டு சரிபார்த்துள்ளனர். அப்போது, ஒரு நடராஜர் சிலையின் அமைப்பு மாறி இருந்தது. இதுகுறித்து அவர்கள், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், புன்னைநல்லூர் கோயிலுக்கு வந்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், அந்தச் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 1974-ம் ஆண்டில், அதாவது 44 ஆண்டுகளுக்கு முன், கோயிலில் இருந்த சிலையை மாற்றியது தெரியவந்துள்ளது. கடந்த 1972-ம் ஆண்டு, கைலாசநாதர் கோயிலில் இருந்த சிலை திருடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள சிலையை எடுத்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஆனால், அதில் சிலவற்றைக் கடந்த 1974-ம் ஆண்டு மாற்றி மோசடிசெய்துள்ளனர். அந்தச் சிலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் சிலை பிடிபட்டபோது, அதில் திருவாச்சி உடைந்திருப்பது போட்டோவில் தெரிகிறது.

ஆனால், இங்கு வைக்கப்பட்டுள்ள சிலையில் திருவாச்சி  உடையாமல் உள்ளது. 44 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேரடியாக வழக்குப்பதிவுசெய்ய முடியாது. இதுகுறித்து டி.எஸ்.பி விசாரித்து, பின்னர் வழக்குப்பதிவுசெய்யப்படும். அந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு  மாற்றப்படும். அவ்வாறு மாற்றம்செய்த பின்னர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் உரிய விசாரணைசெய்து சிலையைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அதே போல, கடந்த 1974-ம் ஆண்டு, கொல்கத்தாவில் பிடிபட்ட மற்றொரு சிலை கும்பகோணம் அருகே உள்ள தண்டாந்தோட்டத்தில் உள்ள கோயிலில் இருந்து காணாமல் போனதாக இருக்கும் என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது. மற்ற 2 சிலைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் நடந்த திருட்டுகுறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க