வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (24/05/2018)

கடைசி தொடர்பு:16:15 (24/05/2018)

`ஓ.பி.எஸ் செய்த தவற்றை நாம் செய்யக் கூடாது' - இணைப்பு விழாவை ரத்துசெய்த தினகரன்

தஞ்சாவூரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.க சேர்வதை இணைப்பு விழா என்கிற பெயரில் இன்று தினகரன் நடத்த இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யபட்டதால் நிர்வாகிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

தஞ்சாவூர் பகுதிகளில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்வதை டி.டி.வி.தினகரன் தலைமையில் இணைப்பு விழா என்கிற பெயரில் பிரமாண்ட விழாவாக நடத்த ஏற்பாடுசெய்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், கடைசி நேரத்தில் திடீரென இந்த நிகழ்ச்சியை தினகரன் ரத்துசெய்துவிட்டதால், நிர்வாகிகள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினகரன்- திவாகரன் மோதலைத் தொடர்ந்து, 23-ம் தேதிக்குப் பிறகு பரபரப்பான செய்தி வரும் என்றும் மீடியாக்களுக்கு பெரிய பிரேக்கிங் நியூஸ் இருக்கும் என்றும் திவாகரன் மன்னார்குடியில் தன் ஆதரவாளர்களிடம் கூறிவந்தார். தினகரன் தரப்பினர், திவாகரனுக்கு எதிராக சசிகலா வெளியிட்ட வக்கீல் நோட்டீஸை பெரிய போஸ்டராக அடித்து உறவுகள் அதிகம் வாழும் பகுதியான தஞ்சாவூர் முழுவதும் ஒட்டினர்.

அதேபோல, `மறக்க முடியுமா?' என்கிற தலைப்பில் தினகரன்மீது துரோகிகளும் எதிரிகளும் சேர்ந்து கொடுத்த பொய் வழக்கால், தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வந்த அனைவருக்கும் நன்றி என அ.ம.மு.க-வினர் ஃப்ளெக்ஸ் வைத்தனர் நகரம் முழுவதும். திவாகரன் எதையோ செய்யப்போகிறார், அதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்ததோடு, நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக, தினகரன் 24-ம் தேதியிலிருந்து இரண்டு நாள்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் திருவாரூரில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்தார். இதன்மூலம் தன் பலத்தைக் காட்டுவதோடு, திவாகரனின் திட்டத்தை உடைக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்ய தினகரன் தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவர்களும், `உழவன் மகனே, மகுடமே' எனத் தினகரனை வரவேற்று ஃப்ளெக்ஸ் வைத்திருந்தனர். நேற்று மதியமே அண்ணன் வந்து விடுவார். அதற்காக சீக்கிரமே எல்லா வேலைகளையும் முடித்துவிடுங்கள் எனத் தொண்டர்களுக்கு நிர்வாகிகள் உத்தரவிட, அவர்களும் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கினர். அப்போது, `அண்ணன் 24-ம் தேதி மதியம்தான் வர இருக்கிறார். ஏற்பாடு பிரமாதமாக இருக்க வேண்டும்' என மீண்டும் உத்தரவு வந்திருக்கிறது. ஆனால், இன்று மதியம் தினகரனின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டு விட்டதாக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து நிர்வாகிகளிடம் பேசினோம். ''மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 5,000 பேருக்கும் மேல் எங்கள் கட்சியில் இணையும் விழா, பாபநாசத்தில் பெரிய அளவில் நடக்கவிருந்தது. மேலும், கட்சி அலுவலகம் திறப்பு விழா, உறுப்பினர்கள் சேர்க்கை, வணிக வளாகங்கள் திறப்பு எனப் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால், தூத்துக்குடியில் பெரும் துயரச் சம்பவம் நடந்திருக்கும் இந்த நேரத்தில் எப்படி இணைப்பு விழாவை நடத்துவது என அண்ணன் யோசித்தார். மேலும், அவர் தூத்துக்குடியில்தான் தற்போது இருக்கிறார்.

தூத்துக்குடி சம்பவம் நடந்த பிறகு, வைகைச்செல்வன் இல்ல நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதே தவற்றை நாமும் செய்யக் கூடாது என்றும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையிலும் தற்காலிகமாக இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரத்தில், இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை இன்னும் பிரமாண்டமாகச் செய்து, மன்னார்குடியில் இருந்துகொண்டு கோட்டையில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் திவாகரன் எண்ணத்தில் ஓட்டை விழும் வகையில் இந்த நிகழ்ச்சி  நடக்கும்'' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க