`எட்டாவது மாடியில் இருப்பவர்கள் கொலைகாரர்கள்!' - பெங்களூரு வேதாந்தா அலுவகம் முற்றுகை

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. 

போராட்டம்

தூத்துக்குடி போராட்டம் (கோப்புப் படம்)

தூத்துக்குடியில், வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதுடன், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, குமரெட்டியாபுரம் உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 100 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை பேரணி செல்ல முயன்றவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர்  உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விவகாரம், தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வேதாந்தா குழும நிறுவனர் அனில் அகர்வாலின் வீட்டுக்கு அருகிலும் போராட்டம் நடைபெற்றது. 

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வேதாந்தா நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர். பெங்களூரு நகரின் முக்கிய சந்திப்பான எம்.ஜி.சாலை பகுதியில் அமைந்துள்ள வேதாந்தா அலுவலகம் முற்றுகையால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேதாந்தா அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தில், பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதனால், அப்பகுதியில் கூட்டம் கூடியது. அந்தக் கட்டடத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மத்தியில் பேசிய போராட்டக்காரர், `நாங்கள் முட்டாள்கள் அல்ல. மிகுந்த சோகத்தில் இங்கு வந்திருக்கிறோம். உங்கள் கட்டடத்தின் 8-வது மாடியில் இருப்பவர்கள் கொலைகாரர்கள் (வேதாந்தா அலுவலகம் 8-வது மாடியில்தான் செயல்படுகிறது)’’ என்று பேசினார். மேலும், வேதாந்தா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சட்ட விரோதமாக நன்கொடை பெற்றதாக, பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளையும் அவர்கள் விமர்சித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!