`கல்வீச்சு, பைக் எரிப்பு, பதற்றம்' - 3-வது நாளை எட்டியும் தணியாத தூத்துக்குடி போராட்டம்!

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீவிர போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றும் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. 

தூத்துக்குடி போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுமுன்தினம் நடந்த 100-வது நாள் போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் தொடங்கிய போராட்டம்,         3-வது நாளை எட்டியுள்ளது. ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதனால், போலீஸுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் உருவாகும் சூழ்நிலை இருப்பதால், அங்கு தொடர் பதற்றம் நிலவிவருகிறது.

அவர்களைக் கட்டுப்படுத்த அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நேற்று நடந்த கலவரத்துக்கு இடையே, இன்று கமாண்டோ படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில், இன்றும் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. தூத்துக்குடி, பிரையன்ட் நகரில் உள்ள டாஸ்மாக் இடிக்கப்பட்டதுடன், அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு பைக் எரிக்கப்பட்டது. அப்போது, அந்தப் பகுயில் கல்வீச்சு தாக்குதலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, முத்தம்மாள் காலனியில் உள்ள பணிமனைக்குப் பின்புறம் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்துமீது பெட்ரோல்குண்டு வீசப்பட்டது.

இது நடந்துகொண்டிருக்கும்போதே, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் காவல் நிலையத்தின் மீதும் பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. மதியம் 2.30 மணியளவில், அண்ணா நகர் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவிவந்த நிலையில், அங்கு தமிழக அரசின் சிறப்புப் பயிற்சிபெற்ற அதிரடி விரைவுப்படையினர் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு நடத்தினர். இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களை டி.டி.வி. தினகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று சந்தித்து ஆறுதல் கூறினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!