வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (24/05/2018)

கடைசி தொடர்பு:19:23 (24/05/2018)

`இதுபோல இனி நடக்க வேண்டாம்' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதல்வர் புது உத்தரவு

 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில், இனி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக் கூடாது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 ஸ்டெர்லைட்

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்துவருகின்றன. தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தர்ணா, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அதுபோல, அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

 இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் களமிறங்கியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டின்போது விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், 12 பேரின் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்திட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்.              இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் தொடருவதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால், உள்துறை மற்றும் டி.ஜி.பி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில், பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் போலீஸாரைப் பணியமர்த்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,போராட்டத்தில் ஈடுபடுவோர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்

சென்னையில் இன்று, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் பேரணியாகச் சென்றனர். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, இன்று மாலை ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது மெரினாவில் மக்கள் அதிரடியாகக் குவிந்ததைத் தடுக்கும் விதமாக, அங்கும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியைப் பொறுத்தவரை, கமாண்டோ மற்றும் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதனால், மூன்று நாளாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிடப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், அங்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தால் சென்னை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் 13 பேர் பலியாகினர். அதுபோல மீண்டும் ஒரு சம்பவம் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்

இதனால் உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் உடனுக்குடன் ஸ்டெர்லைட் ஆலைகுறித்த ரிப்போர்ட்களை அனுப்பிவருகின்றனர். அதன்படி உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதோடு, தூத்துக்குடி மாவட்ட நிலவரமும் முதல்வர் அலுவலகத்துக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக போலீஸார் தெரிவித்தனர். 

இதுகுறித்து, அரசு ஊழியர்கள் சங்கச் செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், "ஜனநாயக நாட்டில் அறவழியில் போராட்டம் நடத்தக்கூட முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த முறை ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னையில் போராட்டம் நடந்தபோது, முள்வேலி அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற பொதுமக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால்தான் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர். 

 போலீஸார் கூறுகையில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது கலவரத்தைத் தூண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 78 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியைத் தவிர மற்ற இடங்களில் நடக்கும் போராட்டத்தையும் கட்டுப்படுத்திவருகிறோம். இதனால் சென்னை, தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுவதால், கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அனைத்துப் பகுதிகளும் எங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இனிமேல் வன்முறை வெடிக்காது" என்றனர்.