வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (24/05/2018)

கடைசி தொடர்பு:17:45 (24/05/2018)

மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்களுக்கு 'ஸ்மார்ட்’ கவனிப்பு... கல்வித் துறையின் கிடுக்கிப்பிடி காரணமா?

வீட்டிற்கும், சொந்த ஊருக்கும் அருகிலுள்ள பள்ளியென்பதற்காக லட்சக்கணக்கில் பணம் கட்டி வேலையை வாங்கிய ஆசிரியர்கள் எப்படி இடமாற்றத்திற்குச் சம்மதிப்பார்கள்? அதேபோல, மாணவர்கள் பற்றாக்குறையைக் காரணம்காட்டி வருமானம் தரும் ஆசிரியர் பணியிடத்தை விட்டுக்கொடுக்க நிர்வாகம் எப்படி சம்மதிக்கும்? இவர்கள்தான் மாணவர்களை எப்படியாவது சேர்த்து எண்ணிக்கையை அதிகரிக்கும் வேலையில் இறங்குகிறார்கள்.

மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்களுக்கு 'ஸ்மார்ட்’ கவனிப்பு... கல்வித் துறையின் கிடுக்கிப்பிடி காரணமா?

மீபத்தில் வாட்ஸ்அப்பில் சுற்றிய தனியார் பள்ளி ஒன்றின் அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில், 'ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ஜியோ ஸ்மார்ட்போன் வழங்கப்படும்' என்ற அறிவிப்புதான் அது. தமிழ்வழிக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்துவதற்காக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டது. பெற்றோர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்து மாணவர்களைச் சேர்க்குமளவுக்கு கல்விக்கூடங்களின் நிலை மாறிப்போனது ஏன்? 

கல்வி

குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பின், பள்ளி மூடப்பட்டு, தங்களது பணியிடம் மாற்றப்படலாம் என்ற ஆசிரியர்களின் பயமும், தங்களது பள்ளி மூடப்படலாம் என்ற பள்ளி நிர்வாகத்தின் பயமுமே இதற்குக் காரணம். கல்வித் துறையின் கீழ்வரும் அரசுப் பள்ளிகளில், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளும் அடக்கம். இந்தக் கல்விக்கூடங்கள்தான் மாணவர்களைக் கவர்வதற்காக பல்வேறு வழிகளில் முயல்கின்றன.

அரசாங்கத்தின் கணக்குப்படி, 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இந்த விகிதாச்சாரம், 45 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று இருந்தது. பிறகு 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்றாகி, தற்போது 35:1 என்ற விகிதத்தில் வந்து நிற்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலான பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர் பணியிடங்களுக்கான அனுமதியைப் பெற்று, அந்த இடங்களை போட்டிக்கேற்ப ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதுண்டு. அப்படிச் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் விகிதாச்சாரத்துக்கேற்ப மாணவர்களின் எண்ணிக்கை இல்லாதபோதுதான் சிக்கல் உண்டாகிறது. மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிக்கும்போது, ஆசிரியர் பற்றாக்குறை என்ற சூழலும் ஏற்படுவதுண்டு. இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, கூடுதலாக உள்ள ஆசிரியர்களில் ஜூனியர்களைக் கணக்கெடுத்து, ஆசிரியர்கள் தேவையிருக்கும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வர். 

அதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்கிறார்கள் கல்வியாளர்கள்.

கல்வி

அனைத்து பள்ளிகளுமே மாணவர் சேர்க்கைக்காக  இன்று வீடு வீடாகச் சென்று கேன்வாஸிங் செய்வது நடைமுறைக்கு வந்துவிட்டது. அப்படி செய்யும்போது பெற்றோர்களின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி, "உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்தால், பள்ளி ஆசிரியரின் ரேஷன் கார்டை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று ரேஷன் கார்டைக் கொடுத்து மாணவர்களைப் பிடிக்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ளும் ஆசிரியர்களும் உண்டு என்கிறார்கள்.

மாணவர்களுக்கு தொலைவு ஒரு காரணம் என்றால், அந்த மாணவர்களுக்காக வேன் வசதி ஏற்பாடு செய்வதையும் சில ஆசிரியர்கள் கூட்டாகச் சேர்ந்து செய்கிறார்கள். யாருக்கெல்லாம் தலைக்கு மேலே `பணி இட மாறுதல்' எனும் கத்தி தொங்குகிறதோ, அந்த ஆசிரியர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்கிறார்கள். 

ஸ்மார்ட்போன் வழங்கும் அறிவிப்புபோலவே, பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தால் குலுக்கல் முறையில் வீட்டுமனை, பரிசுப்பொருள்கள், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் என விதவிதமாக வழங்கி பெற்றோரைக் கவர்வதும் ஒருசில இடங்களில் நிகழ்கிறது.

ஸ்மார்ட்போன்

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் இத்தகைய செயல்கள் குறித்து, கல்வியாளர் முனைவர் பெ.சந்திரபோஸிடம் கேட்டோம்...

"மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்களுக்கு பண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்குவது சரியான வழிமுறை அல்ல. இது, பள்ளி மற்றும் ஆசிரியர்களின் மாண்பை பெற்றோர் மத்தியில் குறைக்கவே வழிவகுக்கும். தமிழ்வழிக் கல்வியிலும் ஆங்கில மொழிப்பாடம் கற்றுத் தரப்படுகிறது. ஆங்கிலம் கற்றுத்தருகிறோம் என்ற உண்மையை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்தவேண்டியது முக்கியம். அதேபோல, மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்களுக்குச் செலவிடும் தொகையை, பள்ளியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதுபோல `ஸ்மார்ட் வகுப்பறை' போன்ற நவீன முறைகளை தங்கள் பள்ளியிலும் கொண்டுவருவதன் மூலம் பெற்றோர்களை ஈர்க்க முடியும். இது, கல்வித்தரத்தையும் மாணவர்களின் அறிவாற்றலையும் மேம்படுத்தும்" என்றார்.

தமிழ்வழிக் கல்வியைப் பொறுத்தவரை இன்னொரு பரிதாபமான சூழல் நிலவுகிறது. தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை பல்வேறு பள்ளிகளில் இருக்கின்றன. பல தனியார் பள்ளிகளில் அறிவியல் ஆசிரியர்களே தமிழ் ஆசிரியர்களாகவும் பணியாற்றுகிறார்கள். தமிழ்வழிக் கல்வியைத் தொடர்வதற்காக பள்ளிகளுக்கு இருக்கும் சிக்கல்களை அரசாங்கம் கவனத்தில்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு இலவசங்கள் கொடுத்து வசப்படுத்தும் இழிவான செயலை வெகுவிரைவில் தடுத்திட வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்