`ரூ.10 லட்சம் வேண்டும்; எங்களைச் சுடுங்கள்’ - போலீஸுக்கு எதிராக சென்னை ஐ.டி ஊழியர்கள் கொந்தளிப்பு

ஐடி ஊழியர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் 13 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதைக் கண்டித்து, சென்னை ஐ.டி ஊழியர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ம் தேதி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் புறப்பட்டனர் பொதுமக்கள். அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  அதனால், இருவருக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. பின்னர்,  அது வன்முறையாக வெடித்தது. ஒரு கட்டத்தில், காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

காவல் துறையினர் துரத்தித்துரத்தி அடித்ததால், போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த வாகனங்களை எரித்தனர். ஜன்னல்களை உடைத்தெறிந்தனர். வன்முறை அதிகரித்ததையடுத்து போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள், சாலை மறியல்கள் நடந்துவருகின்றன.

இதனிடையே, துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, சென்னையில் பணியும் ஐ.டி ஊழியர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஐ.டி.ஊழியர்கள் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "10 லட்சம் ரூபாய் வேண்டும்; எங்களைச் சுடுங்கள். ஸ்டெர்லைட்டை அழியுங்கள். தூத்துக்குடி மக்களே, நாங்கள் உங்களோடு இருப்போம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆவேசத்துடன் அவர்கள் முழக்கமிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!