பிரதமர் மோடிக்கு ராகுலின் புதிய சவால் - சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகும் #FuelChallenge | After Virat Kohli's challenge, Rahul Gandhi has one for Narendra Modi

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (24/05/2018)

கடைசி தொடர்பு:08:14 (25/05/2018)

பிரதமர் மோடிக்கு ராகுலின் புதிய சவால் - சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகும் #FuelChallenge

விராட் கோலியின் சவாலை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி விடுத்துள்ள ஃப்யூல் சேலஞ்ச், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

ராகுல் காந்தி

கடந்த மார்ச் மாதம், பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட ஃபிட் இந்தியா அமைப்பின் ஃபிட்னஸ் சேலஞ்ச், தற்போது வைரலாகிவருகிறது. நேற்று முன்தினம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ட்விட்டரில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, `சமூக வலைதளங்களில் நீங்கள் உங்கள் உடல்களை எப்படி ஃபிட்டாக வைத்துள்ளீர்கள் என்பது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிருங்கள்' என வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, பலரும் ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோ அனுப்ப, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் தன் பங்குக்கு வீடியோவை வெளியிட்டு, பிரதமர் மோடியை இந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார்.  அதை ஏற்றுக்கொண்ட மோடி, விரைவில் எனது ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோவைப் பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார். தற்போது, இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொண்டுவந்துள்ள ஃபியூல் சேலஞ்ச் (FuelChallenge) இந்திய அளவில் ட்ரெண்டாகிவருகிறது. 

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி, அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், ``கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக்கொண்டதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் அது போல சவால் விடுகிறேன். அது பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். இல்லையென்றால், நாடு முழுவதும் காங்கிரஸ் எழுப்பும் கிளர்ச்சிகள் உங்களை குறைக்கவைக்கும். உங்களின் பதிலை எதிர்பார்த்துள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த ஃபியூல் சேலஞ்ச் சிறிது நேரத்திலேயே வைரலானதுடன், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. பலரும் மோடிக்கு எதிராக இந்த ஃபியூல் சேலஞ்சைப் பகிர்ந்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க