ஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா?

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மெரினா கடற்கறையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 'தர்ம யுத்தம்' செய்த போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததை மறந்துவிட்டார்களா? கண்ணை மூடி தியானம் செய்து மெளனப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரைச் சுற்றி ஆதரவாளர்கள் நின்றிருந்தபோது 144 தடை சட்டத்தின் விதிமுறைகள் எங்கேபோனது?

ஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா?

"தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதால்தான் நான் அங்கு சென்று மக்களைச் சந்திக்கவில்லை" என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சியிலிருப்பவர்கள் நினைத்தால் எந்த ஒரு விதிமுறையையும் கடைபிடிக்காமல் மக்களை சுட்டு வீழ்த்த முடிகிறது, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு வழங்க முடிகிறது, ஆனால் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மக்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல நேரில் செல்ல முடியவில்லை . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மெரினா கடற்கறையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 'தர்ம யுத்தம்' செய்த போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததை மறந்துவிட்டார்களா? கண்ணை மூடி தியானம் செய்து மெளனப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரைச் சுற்றி ஆதரவாளர்கள் நின்றிருந்தபோது 144 தடை சட்டத்தின் விதிமுறைகள் எங்கேபோனது?

தூத்துக்குடியில் இவ்வாறான ஒரு சம்பவத்தை நிகழ்த்தி தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டு,  முதல்வர் சிறுபிள்ளைத்தனமான பதிலைக் கூறுகிறார். துணை முதல்வரோ கட்சி நிர்வாகியின் வீட்டு விஷேசத்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கிறார்.மேலும் "தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது" என்றும் கூறியுள்ளார் முதல்வர்.யாரின் தற்காப்புக்கு என்பது புரியவில்லை.போலீஸாருக்கா? வேதாந்தா நிறுவனத்துக்கா? மக்களை பாதுகாக்கவேண்டிய அரசாங்கம், தற்காப்புக்காக 13 பேரை கொலை செய்வதென்பது இதுவே முதல் முறையாக இருக்கும்."மக்கள் முதலில் சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்;பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடாது" என்றும் கூறியுள்ளார்.பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்று கூறும் நீங்கள் பொது சேவை செய்ய வந்த காவல்துறையிடம் மக்களின் சொத்துக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்று சொல்லி அனுப்பவில்லையா ? நேற்று வெளியான காணொளியொன்றில் போலீஸாரே மீனவப் படகிற்கு தீ வைக்கிறார்கள்.ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஆட்டோக்களுக்கும்,வாகனங்களுக்கும் தீ வைத்தது யார் என்பதை வட இந்திய மீடியாக்களே படம் போட்டுக்காட்டின. 

ஓபிஎஸ் எடப்பாடி

144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்தால் கூட்டமாகத்தான் செல்லக்கூடாது. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர்தானே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதானே நீங்கள் தனியாகவே சென்று ஆறுதல் கூறியிருக்கலாமே. எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் வரை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.ஆறுதல் சொல்வதற்கு முதல்வர்கூட செல்லவேண்டாம், அனைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் முதல் ஆளாக வந்து அதிமுக அரசை ஆதரித்து பேசும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களோ,அல்லது அதிமுக அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியோ சென்று ஆறுதல் தெரிவித்திருக்கலாமே.மக்களை சட்டத்தை மதிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.அதே சமயம் அரசாங்கமும் சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் பின்பற்றவேண்டும்.

144 தடை

144 தடை உத்தரவு:

'144 தடை உத்தரவுச் சட்டம்' என்பது 1861ம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சியில் கலவரங்களை தடுக்க உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்த பரோடா மாகாணத்தில்தான் 144 தடை உத்தரவு முதன்முதலில் பிறப்பிக்கப்பட்டது.பின்னர் நடந்த அனைத்து சுதந்திரப் போராட்டங்களையும் ஒடுக்க இந்தச் சட்டத்தை பயன்படுத்தினார்கள் ஆங்கிலேயேர்கள்.அந்த சட்டத்தை இன்று வரை சிறு சிறு மாற்றங்கள் மேற்கொண்டு பின்பற்றி வருகிறது  இந்திய அரசு.

விதிமுறைகள்:

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது சாலைகளில் நான்கு அல்லது நான்கிற்கும் மேற்பட்டோர் ஒன்று சேரக்கூடாது. மீறி ஒன்று கூடினால் 'கலவரத்தில் ஈடுபட்டவர்கள்' என்று கூறி வழக்குப் பதிவு செய்யமுடியும். அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும். கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்துக்கொண்டிருக்கும் போது போலீஸாரை தடுக்க முயன்றால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்.

ஊரடங்கு உத்தரவும் 144 தடையும் ஒன்றா ?

இல்லை. ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் வீட்டை விட்டு தனியாககூட வெளியே வரக்கூடாது.அப்படி வரவேண்டுமென்றால் போலீஸாரிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும். 

இப்போது சொல்லுங்கள் முதல்வரே.. இந்த சட்டம் உங்களை தூத்துக்குடிக்குள் அனுமதிக்காதா... இல்லை தூத்துக்குடிக்கு நீங்கள் நான்கு பேருடன் சென்றால் உங்களை போராட்டக்காரர்கள் என்று கூறி காவல்துறைதான் சுட்டு வீழ்த்திவிடுமா? பதில் சொல்லுங்கள் முதல்வரே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!