"தடியடி, துப்பாக்கிச்சூடுகளுக்கு புதிய விதிமுறைகள் அவசியம்!’’ - உயர்நீதிமன்றத்துக்கு ஒரு வேண்டுகோள் | "New law should be created for gun shot" - legal expert rajavarman

வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (25/05/2018)

கடைசி தொடர்பு:09:11 (25/05/2018)

"தடியடி, துப்பாக்கிச்சூடுகளுக்கு புதிய விதிமுறைகள் அவசியம்!’’ - உயர்நீதிமன்றத்துக்கு ஒரு வேண்டுகோள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளார்கள். இந்தக் கொடூர நிகழ்வு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் குலைநடுங்க வைத்துள்ளது. மக்கள் திரள் போராட்டங்களின்போது, இதுபோன்ற அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து புதிய விதிமுறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும் எனத் தஞ்சையைச் சேர்ந்த சட்ட வல்லுநர் ராஜவர்மன் வலியுறுத்தியுள்ளார். 

போலீஸ் தடியடி

இந்திய அரசமைப்புச் சட்டம், ஜனநாயகவழியில் மக்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கிறது. மக்கள் தங்களது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள, வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிர்பந்தத்துக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், இவர்கள் ஒருபோதும் வன்முறையைக் கையில் எடுக்க விரும்பமாட்டார்கள். இவர்களில் ஒருசிலர் உணர்ச்சி வேகத்தில் அதிரடியான செயல்களில் இறங்கினால், காவல்துறையினர் சாதுர்யமாகச் செயல்பட்டுத்தான் கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்ய வேண்டும். ஒருவேளை தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், மக்களைக் கலைப்பது மட்டுமே காவல்துறையினரின் நோக்கமாக இருக்க வேண்டும். படுகாயம் ஏற்படுத்துவதையோ, படுகொலை செய்வதையோ காவல்துறையினர் நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. காவல்துறையினர் தரையில் மண்டியிட்டு வானத்தை நோக்கிச் சுட்டாலே அச்சத்தில் மக்கள் கலைந்து சென்றுவிடுவார்கள். தூத்துக்குடியில் காவல்துறையினர் இதனைக் கடைப்பிடிக்காமல், மக்களைக் கொல்லவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மக்களின் நெஞ்சை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றுள்ளார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, என்னதான் தீர்வு? தூத்துக்குடி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்கிறார் தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜவர்மன். 

துப்பாக்கிச் சூடு

அவர், ``இதுபோன்ற போராட்டங்களின்போது காவல்துறையினர் அனைவரும் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். சீருடையில்வழக்கறிஞர் ராஜவர்மன் அவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பேட்ஜ் இருந்தால்தான் ஓரளவுக்காவது பொறுப்புடன் நடந்து கொள்வார். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவோம் என எச்சரிக்கையோடும் நடந்து கொள்வார். தடியடி நடத்துவதாக இருந்தால் முதலில் அறிவிப்பு செய்ய வேண்டும். மக்கள் கலைந்து செல்வதற்கான வழிகளை உருவாக்க வெண்டும். இதனைச் செய்தாலே பெரும்பான்மையானவர்கள் கலைந்து சென்று விடுவார்கள். இதற்கும் கலையவில்லையென்றால், கண்ணீர்ப் புகைகுண்டு வீசப்போகிறோம் என அறிவிப்பு செய்துவிட்டு, பிறகுதான் வீச வேண்டும். இறுதி முயற்சியாக, மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நின்றுகொண்டு, வானத்தை நோக்கியே சுட வேண்டும். இவற்றைச் சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து விதிமுறைகளாக உருவாக்க வேண்டும். சென்னையில் உள்ள மனிதநேயமிக்க வழக்கறிஞர்கள், இதற்காகப் பொதுநல வழக்கு தொடர வேண்டும்” என்றார். 

தூத்துக்குடி சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள், வாகனத்தின் மீது ஏறி நின்றும், மறைந்திருந்தும் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டதால்தான், இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்ற கொடூரம் கதிராமங்கலத்திலோ, நெடுவாசலிலோ நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பயம் நம் நெஞ்சை உலுக்கி எடுக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் உண்மையாகவே மனிதநேயம் மிக்கவர்கள் என்றால், போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் பதைபதைப்பான வேண்டுகோள். 


டிரெண்டிங் @ விகடன்