`ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை!’ - தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி, பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், 'மாவட்டத்தில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுப்பதுதான் முதல் பணி' என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 11 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். மொத்தம் 102 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 19 பேர் படுகாயங்களுடனும், 83 பேர் லேசான காயத்துடனும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். காவல்துறையைச் சேர்ந்த 34 பேர் காயமடைந்துள்ளனர்.  

போராட்டத்தில்  ஈடுபட்டுவந்த மக்களின் முக்கியமான கோரிக்கையே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான். தமிழக அரசின் முடிவும் அதுதான். அதன் ஒரு பகுதியாக ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. மேலும், சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றும் அந்த ஆலைக்கு வழங்கப்படவில்லை. இதனால், அந்த ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை. ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் முடிவு என முதலமைச்சர் பழனிசாமி, இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே தெளிவாகக் கூறியிருந்தார். இதனால் பொதுமக்கள், அரசின் நடவடிக்கையை ஏற்று, அமைதி திரும்ப ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாளை முதல் வணிகர்கள் கடைகளைத் திறக்க வேண்டும். மக்களின் வசதிக்காக அம்மா உணவகம் மற்றும் பண்ணை பசுமைக் கடைகளும் 24 மணிநேரம் செயல்படும்’’ என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!