வெளியிடப்பட்ட நேரம்: 00:03 (25/05/2018)

கடைசி தொடர்பு:07:47 (25/05/2018)

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்கு பதிவு..!

மு.க.ஸ்டாலின் உள்பட 25 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரைச் சந்தித்து பேசுவதற்காக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனுமதி கேட்டு, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர்.

முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி ஏதும் அளிக்கப்படாத நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தி.மு.க-வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, தலைமைச் செயலகத்துக்கு வெளியே தி.மு.க-வினர் சாலையை மறித்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பின்னர், காவலர்கள் மு.க.ஸ்டாலினை குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்தனர். ஸ்டாலின் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்டு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.