தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு..! உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை, உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈடு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய கோருதல்,  இணைய தள சேவை முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் 8 பேர் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மே 22-ம் தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பள்ளி மாணவி உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  

இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார், மதுரையைச் சேர்ந்த சையது அப்துல் கதிர், ஒத்தக்கடையைச் சேர்ந்த எழிலரசு, கோவில்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, சமூக ஆர்வலர் கே.கே ரமேஷ், வழக்கறிஞர் ரஜினி, மதுரை பி.பி.குளத்தைச் சேர்ந்த கதிரேஷன், ராஜ்குமார்  ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.  

மனுக்களில் அவர்கள் கூறியிருப்பதாவது, 'தூத்துக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க உத்தரவிட வேண்டும். தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி இணையதள சேவையை முடக்கியுள்ளனர். இதனால் பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மேற்படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஊர்வலமாக சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை டி.ஐ.ஜி, காவல்துறை எஸ்.பி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து பணியில் இருந்து விடுவித்து தற்போது பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில்  நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

மேலும் இச்சம்பவத்தைக் கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் இச்சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க உத்தர விட வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!