வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (25/05/2018)

கடைசி தொடர்பு:07:44 (25/05/2018)

இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் அறிவித்திருந்தன.

போராட்டம்

தூத்துக்குடியில் கடந்த மூன்று நாள்களாக அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைகள் அடைப்பு, போக்குவரத்து நிறுத்தம், இணையம் துண்டிப்புகளால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சில அரசு பேருந்துகள் இயங்கவில்லை. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.