`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்

தூத்துக்குடியில் கடந்த மூன்று நாள்களாக நடந்துவரும் போராட்டம் மற்றும் கலவரத்தினால் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் அம்மாவட்ட பொதுமக்கள். 

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்து வந்த போராட்டம்  22.5.18 அன்று 100-வது நாளை எட்டியதால் அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவை அரங்கேற்றப்பட்டன. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டம், துப்பாக்கிச்சூடு நடைபெற்று மூன்று நாள்கள் ஆகியும் இதுவரை அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காமாண்டோ படைகளும் நேற்று அம்மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் புதிதாக பதவியேற்ற சந்தீப் நந்தூரி கூறுகையில் இந்த மாவட்டத்தில் அமைதியை நிலை நாட்டுவதே என் முதல் வேலை. அதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். யாரும் காவல்துறைக்கு அஞ்ச வேண்டாம், வியாபாரிகள் கடைகளைத் திறக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி முழுவதும் சில கடைகள் மட்டும் ஆங்காங்கே திறக்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோ, மினி வேன்கள் போன்றவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் மட்டும் ஆங்காங்கே உள்ள கடைகளில் விற்கப்படுகிறது. காய்கறிகளில் விலை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. சாதாரணமாக ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கும் மிளகாய் தற்போது 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. 25 ரூபாய்  மதிப்புள்ள தேங்காய் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெண்கள் முற்றிலும் வெளியில் வருவதைத் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். கோயில்களுக்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. 

இன்று முகூர்த்த நாள் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் திருமண மண்டபத்தை வெளியில் பூட்டி வைத்து விட்டு உள்ளே திருமணம் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் வந்தால் மட்டும் மண்டபத்தைத் திறந்து உள்ளே அழைத்துச் செல்கின்றனர் திருமண வீட்டார். திருமணத்தில் கலந்துகொள்ள வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தற்போது வர முடியாமல் போயுள்ளது. பெண் வீட்டில் சிலர், மாப்பிள்ளை வீட்டில் சிலர் பேர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். மண்டபத்துக்கு உள்ளே திருமணம் நடப்பது வெளியில் இருக்கும் ஒருவருக்குகூட தெரியாத வண்ணம் அவ்வளவு அமைதியாக  நடைபெற்று வருகிறது. தோரணங்கள், மகிழ்ச்சி, கலகலப்பு, திருமணம் கொண்டாட்டம் என எதுவும் இல்லாமல் இருக்கிறது. சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் ஆங்காங்கே காணப்பட்டாலும் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!