வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (25/05/2018)

கடைசி தொடர்பு:10:47 (25/05/2018)

‘மக்கள் போராடியது இறப்பதற்காகவா?’ - கொதிக்கும் சிம்பு

நடிகர் சிம்பு ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் அங்கு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த தனது கருத்தைப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சிம்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற, கலவரம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இன்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்து நடிகர் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ``பிரச்னைகள், போராட்டங்கள் தற்போது உயிரிழப்பு. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில். தன் அடிப்படை உரிமைக்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்காகவும் போராடியவர்கள் இன்று உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் போராடியது கடைசியில் இறந்து போகவா? தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது நமக்கு மாற்றம் தேவை. இந்த அரசை நீக்க வேண்டும். என்னுடைய நோக்கம் தீர்வை நோக்கி மட்டுமே உள்ளது. மற்றவை பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் இன்று ஆங்கிலத்தில் பேசுவதுக்கான காரணம் இந்தப் பிரச்னையின் பின்னால் இருப்பவர்களுக்கு இதன் நிலைமை புரிய வேண்டும் என்பதுக்காகத்தான். மிகப் பெரிய சம்பவம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், அது பற்றிய முழுமையான எந்த விவரத்தையும் அரசு தர மறுக்கிறது. தமிழகத்தில் எது நடந்தாலும் இதே நிலையே நீடிக்கிறது.” என பேசியுள்ளார்.