ஸ்ரீரங்கம் கோயில் கருவறையில் செருப்பு வீசிய வாலிபர்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கருவறையில் செருப்பு வீசியதாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஸ்ரீரங்கம்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஆலயம் என்றால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்தான். இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்தவகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள், ரெங்கா ரெங்கா கோபுரம், வெள்ளை கோபுரம் வடக்கு வாசல் ஆகிய வழியாக கோயிலுக்குள் வருகின்றனர். அந்தவகையில், இந்தப் பகுதிகளில் உள்ள நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்த பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை கோயிலுக்கு வருகைதந்த பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்றிருந்தபோது, கோயில் கருவறை அருகே தரிசனத்துக்காகச் சென்ற வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த பையை கருவறைக்கு உள்ளே பெரிய பெருமாளை நோக்கி வீசினார். இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அங்கிருந்த கோயில் அறநிலையத்துறை நிர்வாகிகள், அர்ச்சகர்கள், பொதுமக்களும் இணைந்து அந்த நபரை ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த பையை போலீஸார் சோதனையிட்டனர்.

அதில் அந்த நபரின் துணிகள், சின்ன கத்தி, கத்திரிகோல் மற்றும் செருப்பு ஆகியன இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், நடத்திய விசாரணையில் அந்த நபர், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சன்னாபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பதும் 29 வயதான இவர் கொத்தனார் வேலை பார்ப்பதாகவும், காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாததால் உண்டான விரக்தியில் இவ்வாறு செய்ததாக அவர் கூறியதாக போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து, அவர்மீது போலீஸார் வழக்கு பதிந்து தர்மராஜை கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கருவறையில் செருப்பு, கத்தியுடன் பை வீசப்பட்டதையடுத்து கோயிலில் உடனடியாக பரிகார பூஜை நடத்தப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!