வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (25/05/2018)

கடைசி தொடர்பு:10:30 (25/05/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம்-புதுச்சேரியில் இன்று தி.மு.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ‘ஸ்டெர்லைட்’ தனியார் தொழிற்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை. அதில் 12 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் போராட்டக் களங்களாக மாறியிருக்கின்றன தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டுமென்று, நேற்று தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அதையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான மத்திய பா.ஜ.க அரசு மற்றும் தமிழகத்தின் அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் இன்று (25.5.2018) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன.

திமுக மறியல்

அதன்படி இன்று காலை முதலே தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. புதுச்சேரியில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணபப்படுகிறது. அதேபோல புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் புதுச்சேரி அரசுப் பேருந்துகளும் இயங்கவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தமிழக அரசுப் பேருந்துகள், புதுச்சேரிக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுச் செல்வதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். புதுச்சேரியின் பிரதான வர்த்தக வீதியான நேரு வீதி, பெரிய மார்க்கெட், மீன் அங்காடி, குபேர் அங்காடி உள்ளிட்ட இடங்களில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல பெட்ரோல் பங்குகள், திரையரங்கங்கள், ஆட்டோ மற்றும் டெம்போக்கள் போன்றவைகளும் இயங்கவில்லை. காலை 7 மணிக்கு புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

முழு அடைப்பு

அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர். அதையடுத்து, அவர்களைக் கைது செய்தது காவல்துறை. காமராஜர் வீதியில் இயங்கி வந்த அரசுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் புதுச்சேரி  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க