திருச்சி இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பா? அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

நிபா வைரஸ்
நிபா வைரஸ் தாக்குதலில் ஒரு நோயாளி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே, நிபா வைரஸால் இளைஞர் பாதிக்கப்படவில்லை என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.
 
திருச்சி மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மருங்காபுரி தாலுகாவில் உள்ளது கார்வாடி கிராமம். இங்கிருந்து கடந்த ஒருமாதத்துக்கு முன்பாக கேரளாவுக்கு சாலை போடும் வேளைக்குச் சென்றவர்கள் கடந்த 15.5.18 முதல் சொந்த கிராமத்துக்கு திரும்பி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று  காலை கார்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவரின் மகன் பெரியசாமி (22)க்கு உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பெரியசாமி, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பெரியசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் நிபா வைரஸ் பாதித்ததாக சந்தேகிப்பதாகக் கூறி அவரை தனி வார்டில் வைத்துள்ளனர். இதனால் கேரளாவில் இருந்து வந்துள்ள மற்றவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவியிருக்குமோ  என்கிற அச்சம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
 
கார்வாடி கிராமத்தில் மருத்துவ முகாம் போட வேண்டுமென்று தாசில்தார் கண்ணனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.
நிபா வைரஸ் காய்ச்சலாக இருக்குமோ என்று சந்தேகம் இருப்பதால் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், சுகாதாரச் செயலர், 'இது நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்றும், இந்த நோய் குறித்த ஆய்வு புனேவில்தான் உறுதி செய்ய முடியும்' எனக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, நோயாளி பெரியசாமிக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை என்றும் திருச்சியில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா விளக்கம் அளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!