`மார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை'- மும்பை பங்குச்சந்தைக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலையின் நிலை பற்றி வேதாந்தா நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்கு விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையினால் காற்று மாசுபட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்றும் ஆலைக் கழிவுகளினால் அப்பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டு சுகாதாரமற்ற நிலை நிலவுவதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரிக் கடந்த நூறு நாள்களாக தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்று வந்தது. 22.5.18 அன்று நடந்த 100-வது நாள் போராட்டத்தில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது இப்படி இருக்க ஸ்டெர்லைட் ஆலையின் நிலை மற்றும் வருமானம் குறித்து விளக்கமளிக்கும்படி மும்பை பங்குச்சந்தை வேதாந்தா நிறுவனத்திடம் கோரியிருந்தது. அதற்கு விளக்கமளித்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனம், ``கடந்த 23-ம் தேதி முதல் ஆலையின் மின் இணைப்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துண்டித்துள்ளது. மேலும், ஆலையின் முதல் அலகை மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். மேலும் மார்ச் 27-ம் தேதி முதல் ஆண்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால் அப்போது முதல் ஆலை இயங்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!