வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (25/05/2018)

கடைசி தொடர்பு:13:01 (25/05/2018)

ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர்... நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்

மயிலாப்பூர்

'ரெண்டு வருஷமா கத்துறோம், ஒருத்தரும் கண்டுக்குறது இல்ல'. 'தினமும் ஒரு மணி நேரம் வரிசைல நிக்க வேண்டி இருக்கு, நாளெல்லாம் உழைச்சுட்டு இங்கயும் வந்து நிக்கும்போது முதுகெல்லாம் விட்டுப்போகுது' இப்படி காலையும் மாலையும் பல குரல்கள் கோபமாகவும் சோகமாகவும் எழும்பியபடியே உள்ளது மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலைய பயணச் சீட்டு வாங்குமிடத்தில். வேளச்சேரி டு பீச் பறக்கும் ரயில் பாதையில் மொத்தம் 16 ஸ்டேஷன்கள் உள்ளன. அதில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம் மயிலாப்பூர். மயிலையிலிருந்து வேளச்சேரிக்கு ஒரே ஒரு பேருந்துதான் (எம்15) அது ஒருநாளைக்கு சிலமுறைகள் மட்டுமே இயங்கக்கூடியது. மயிலையிலிருந்து வேளச்சேரி போக வர திருவான்மியூர் போய் இன்னொரு பேருந்து மாறவேண்டும். இதற்கு 35 ரூபாய் செலவாகும். ரயிலிலோ வெறும் 5 ரூபாய்.

வேளச்சேரி டு பீச் ரயில்

இதனால் கூட்டம் அலைமோதும் இந்த ரயில் நிலையத்தில் ஒரே ஒரு கவுண்டரில் மட்டுமே பயணச் சீட்டு வழங்கப்படுகிறது. ஆள் அரவமே இல்லாத ரயில் நிலையங்களில்கூட இரண்டு, மூன்று கவுண்டர் திறந்திருக்கும்போது மயிலையில் மட்டும் ஏன் இப்படி என்று கேட்டால் பதிலே இல்லை. ஆள் பற்றாக்குறை என்று மட்டுமே எல்லா மட்டத்தில் இருந்தும் பதில் வருகிறது. இதனால் காலையிலும் மாலையிலும் இங்கு பெரும் சண்டை நடந்துகொண்டே உள்ளது. அப்படிதான் நேற்று மாலையும் நடந்துகொண்டிருந்தது.

ஒரு பெண்மணி கோபமாக டிக்கெட் கொடுப்பவரிடம், 'இன்னொரு கவுண்டர் திறக்கலாம் இல்ல, ஏன் இப்படி பண்றீங்கன்னு' கேட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த இன்னொரு பெண்மணி 'ஏ எதையும் சத்தம் போட்டுக் கேட்காத, சுட்டுடப்போறாங்க...' என்றதும் சிலர் சிரித்தார்கள். எதிர்காலத்தில் விளையக்கூடிய சம்பவங்களை நினைத்து சிலருக்கு மனது வலித்திருக்கலாம். மக்களின் கோரிக்கையை ஆரம்பத்திலேயே கவனியுங்கள். அதுவே நல்லது.