ஸ்டாலினுடன் போராட்டத்தில் பங்கேற்ற மணமக்கள்! #SterliteProtest

திருமணம் முடிந்த கையோடு ஸ்டாலின் தலைமையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மணமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் மதுராந்தகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமணவிழா மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் ஸ்டாலின் தலைமையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஸ்டாலின், ஸ்டெர்லைட்

காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் சித்தாமூர் ஒன்றியக் கழகச் செயலாளர் தனசேகரன் இல்லத் திருமணம் சோத்துப்பாக்கத்தில் நடந்தது. இந்த விழாவில் மணமக்கள் சே.மாரிமுத்து-மு.பிரியதர்ஷினி ஆகியோருக்கு ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், எஸ்.புகழேந்தி, டாக்டர் ஆர்.டி.அரசு உள்ளிட்ட ஏராளமாகத் தி.மு.க-வினர் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு அங்கிருந்து மணமக்களோடு மதுராந்தகம் புறப்பட்டார் ஸ்டாலின். மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்தில் மணமக்களும் தி.மு.க-வினரோடு கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

ஸ்டெர்லைட், ஸ்டாலின் போராட்டம்

இதையடுத்து, காவல்துறையினர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினரை கைது செய்தனர். மேலும் அவர்களைத் தனியார் மண்டபத்துக்குக் கொண்டுசெல்ல முயன்றபோது, ஸ்டாலின் இருக்கும் வாகனத்தை அங்கிருந்து நகர முடியாதவாறு தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதி பரபரப்பாக இருந்தது. பின்னர் ஸ்டாலினை கைது செய்த காவல்துறையினர் அச்சரப்பாக்கம் கொண்டு சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!