வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (25/05/2018)

கடைசி தொடர்பு:14:50 (25/05/2018)

சென்ட்ரல்- நேரு பூங்கா; சின்னமலை- டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்! கட்டண விவரம்

சென்னை மக்களின் பயணத் தேவைகளை எளிதாக்கும் வகையில், இன்று புதிதாக இரண்டு ரயில் வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ரயில்

சென்னையில், கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவந்த மெட்ரோ ரயில் பணிகள் ஓரளவு முடிந்துவிட்ட நிலையில், இன்று சென்ட்ரல் முதல் நேரு  பூங்கா மற்றும் சின்னமலை முதல் டி.எம்.எஸ் சுரங்கப்பாதை  வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர்  பழனிசாமி. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய  இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹர்தீப் சிங் புரி, தலைமைச்  செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இந்தச் சேவையைத் தொடங்கிவைத்த பின்னர் முதல்வர், துணை முதவர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் புதிய மெட்ரோ வழித்தடத்தில் பயணம்செய்தனர்.

சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலான 2.7 கிமீ தொலைவும்,  சின்னமலை முதல் டி.எம்.எஸ் வரையிலான 4.5 கிமீ தொலைவுக்கும் இந்த  மெட்ரொ ரயில் இயக்கப்பட உள்ளது. அண்ணாநகர் முதல் விமானநிலையம்  வரையிலான மெட்ரோ சேவை முன்பிருந்தே பயன்பாட்டில் உள்ளது.  இன்று தொடங்கப்பட்டுள்ள இரண்டு புதிய வழித்தடங்களுடன், மூன்றாவதாக சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரையிலான வழித்தடமும் இணைக்கப்பட  உள்ளது.  இந்த வழித்தடம், பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 40 ரூபாய் வரை கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கி.மீ தூரம் உள்ள ரயில் நிலையங்களுக்கு 50 ரூபாய்  வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரை  70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

6 குளிரூட்டப்பட்ட சுரங்கப் பாதைகள், நவீன நடைமேடை மற்றும் தானாகத்  திறக்கும் கதவுகள், ரயில் வரும்போது மட்டுமே தானாக நடைமேடைக்கதவு திறக்கும் வசதி ஆகியவை இந்த புதிய வழித்தடத்தின் சிறப்பு அம்சங்களாக  உள்ளன.