ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உருவப்படத்தை அலங்காேலப்படுத்திய போராட்டக்காரர்கள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் வேடமணிந்தவர்களை புதுச்சேரி போராட்டக்காரர்கள் அலங்கோலப்படுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ‘ஸ்டெர்லைட்’ தனியார் தொழிற்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை. அதில் இரண்டு பெண்கள் உட்பட 13 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் போராட்டக் களங்களாக மாறியிருக்கின்றன தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள். இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் நெல்லிதோப்பு சந்திப்பில் ஒன்று திரண்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பதவி விலக வேண்டுமென்றும் சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட்

அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போல இருவருக்கு வேடமணிந்து, அவர்களைப் புதிய பேருந்து நிலையம் வழியே ஊர்வலமாக அழைத்துச் சென்று அலங்கோலப்படுத்தினர். மேலும் ’உலகத்திற்கே உப்பைக் கொடுத்த தூத்துக்குடி மக்கள்மீது நன்றியை மறந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டீர்களே... உப்பிட்டவர்களை நினைக்கவில்லையே’ என்று கூறி அவர்களுக்கு உப்பை ஊட்டி விட்டதோடு அங்கேயே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!