`மேடம் உங்களுக்கு உதவி செய்கிறேன்'- சென்னைவாசிகளைப் பதறவைத்த ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்

சென்னையில் உதவி செய்வதுபோல நடித்து செல்போன், நகைகளைத் திருடிய ஆட்டோ டிரைவர் உட்பட இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். கம்மலைத் திருடிய கொள்ளையன் ஒருவன் அதை உருக்கி மோதிரமாக அணிந்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

சென்னையில் செல்போன் திருட்டுச் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது. செல்போன் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் பல்வேறு வியூகம் அமைத்துள்ளனர். செல்போன் திருட்டோடு தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைப்பறிப்புச் சம்பவங்களும் போலீஸாருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்திவந்தது. இந்தநிலையில் சென்னைக் கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீஸார் மடக்கினர். ஆனால், அந்த ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. இதனால், போலீஸார் ஆட்டோவை விரட்டினர். ஆட்டோ  டிரைவர் மற்றும் அதிலிருந்த ஒருவரை போலீஸார் மடக்கிப்பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்கள் போலீஸாரைத் தாக்கி விட்டு ஓடினர். தொடர்ந்து போலீஸார் அவர்கள் இருவரையும் சினிமா சம்பவம் போல பைக்கில் விரட்டிச் சென்று பிடித்தனர். 

போலீஸாரிடம் சிக்கியவர்கள் ராஜேஷ்கிருஷ்ணா, அரவிந்த் குமார் என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் குடியிருந்துவருகின்றனர். இவர்களிடமிருந்து 54 செல்போன்கள், இரண்டரை சவரன் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

 செல்போன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணா, குடும்பத்துடன் பெருங்குடியில் குடியிருந்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இந்தப் பகுதியில்தான் பீகாரைச் சேர்ந்த சிலர் குடியிருந்துவருகின்றனர். அவர்களுடன் ராஜேஷ் கிருஷ்ணா நெருங்கிப் பழகியுள்ளார். அதில் பீகாரைச் சேர்ந்த அரவிந்த் குமாரும் ராஜேஷ் கிருஷ்ணாவும் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் ரயிலில் தனியாக வரும் பெண் பயணிகள், தமிழ்த் தெரியாத பயணிகள் ஆகியோருக்கு உதவி செய்வதுபோல முதலில் பழகுவார்கள். அதன்பிறகு பயணிகளின் உடைமைகளைத் திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பிவிடுவார்கள். 

2017 இல் சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸில் தனியாகப் பயணித்தப் பெண்ணிடம், இந்தக் கொள்ளையர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். பேசின்பாலம் அருகில் ரயில் சிக்னலுக்காகக் காத்திருந்தபோது பெண் அணிந்திருந்த கம்மலைப் பறித்துவிட்டு ஓடியுள்ளனர். சக பயணிகள் கூச்சல் போட்டதும், ரயிலிலிருந்து குதித்துக் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பான வழக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ளது. 2017ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தில் இப்போதுதான் துப்பு துலங்கியுள்ளது. தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையம் அருகில் வயதான தம்பதியின் உடைமைகளை இவர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். வயதான தம்பதியினரிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்த கொள்ளையர்கள் அவர்களின் உடைமைகளை அங்கேயே தூக்கி வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். இந்த வழக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ளது. 

இதுதவிர சென்னையில் பல இடங்களில் கவனத்தைத் திசை திருப்பி செல்போன்களைத் தொடர்ந்து திருடி வந்துள்ளனர். ஆனால், திருடிய செல்போன்கள் எதையும் அவர்கள் விற்கவில்லை. சுவிட்ச் ஆப் செய்து தங்களிடமே வைத்துள்ளனர். இதனால்தான் இவர்கள் இதுவரை எங்களிடம் சிக்கவில்லை. 

செல்போன்

இந்தக் கொள்ளையர்களுக்கு இந்தி, ஆங்கிலம் நன்றாகத் தெரியும். 'மேடம் உங்களுக்கு உதவி செய்கிறேன்' என்று அறிமுகமாகியே கைவரிசைக் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கொள்ளையர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள் தொடங்கி அனைத்து மாடல் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகார்களின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆட்டோ டிரைவர் என்று கூறி மனைவி மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்துள்ளார். ஆனால், வசதியாக வாழத்தான் இந்தத் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டேன். போலீஸாரிடம் சிக்கினாலும் வீட்டுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகத்தான் தன்னுடைய பெயரை மகேஷ்குமார் என்று மாற்றியுள்ளார் என்பதுவிசாரணையில் தெரியவந்தது" என்றார். 

ஆட்டோ டிரைவர் என்ற போர்வையில் பயணிகளிடம் செல்போன், நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!