வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (25/05/2018)

கடைசி தொடர்பு:17:10 (25/05/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து கிளிநொச்சியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து இலங்கை கிளிநொச்சியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு மீனவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து இலங்கை கிளிநொச்சியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு மீனவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தினை மூடக்கோரி குமரெட்டியாபுரம் மக்கள் கடந்த 4 மாதங்களாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான கடந்த செவ்வாய்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இந்தப் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேரும், மறுநாள் மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் கொல்லப்பட்டனர். போலீஸாரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம், மறியல் எனப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கையில் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை `கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றும், இந்திய அரசுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு எதிராகவும் கண்டன கோஷமிட்டனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி

தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன கோஷம் எழுப்பினர்.