தயவுசெஞ்சு அடிக்காதீங்க...இஸ்லாமிய இளைஞரைக் காப்பாற்றிய சீக்கிய காவலர்!

இந்துப் பெண்ணுடன் கோயிலில் பேசியதற்காக, இஸ்லாமிய இளைஞரைத் தாக்கவந்த கும்பலிடமிருந்து மீட்டிருக்கிறார், சீக்கியக் காவலர். தற்போது,  அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

இஸ்லாமிய இளைஞரைக் காப்பாற்றிய சீக்கிய காவலர்

உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் பகுதியில் உள்ளது, ஜிரிஜியா கோயில். நகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் கோயில் உள்ளதால், மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக இருக்கும். இந்தக் கோயிலில், கடந்த 22-ம் தேதியன்று இஸ்லாமிய வாலிபர் ஒருவர், இந்துப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த சிலர், இந்துப் பெண்ணிடம் பேசிய குற்றத்துக்காக அந்த வாலிபரைத் தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. வாலிபருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணையும் அங்குள்ளவர்கள் தீட்டித்தீர்த்தனர்.

இந்த நிலையில், கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கங்கன்தீப் சிங், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர், அந்தக் கும்பலிடமிருந்து வாலிபரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அப்போது, சிலர் மீண்டும் அந்த வாலிபரை அடித்தனர். இதனால், அந்த வாலிபரைக் கட்டியணைத்து, அடியிலிருந்து அவரைக் காப்பாற்றினார். பின்னர், வாலிபரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச்சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தை கூட்டத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ, இணையதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதையடுத்து, கும்பலிடமிருந்து வாலிபரைக் காப்பாற்றிய கங்கன்தீப் சிங்கை அனைவரும் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பிவருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!